கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து 5 மில்லியன் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்படட்டுள்ளார்.
கொழும்பு கோட்டை நீதவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் 23ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகி வாக்கு மூலம் வழங்கிய நிலையில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
ஜோன்ஸ்டன் பெனாண்டோவுக்கு எதிரான வழக்கு, உதிரிப்பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு பொருத்தப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத BMW வகை சொகுசு கார் ஒன்றை பயன்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவர் மீது கோட்டை நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேல் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமை காரணமாக அவரை மேல் நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதவான் தனுஜா லக்மாலி இதன் போது அறிவுறுத்தினார்.
வழக்கு விசாரணையின் போது, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு நேற்றையதினம் (29) பிணையில் விடுவிக்கப்பட்ட இரண்டு சாரதிகளுடன் ஜோன்ஸ்டன் பெனாண்டோ நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.
ஜோன்ஸ்டன் பெனாண்டோ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், தனது கட்சிக்காரருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் மோட்டார் போக்குவரத்து சட்டத்தின் கீழ் வருவதால் பிணை வழங்குவதற்கு அனுமதியளிக்கலாம் என வாதிட்டார்.
பொருத்தமான எந்தவொரு பிணை நிபந்தனைகளிலும் ஜோன்ஸ்டன் பெனாண்டோவை விடுவிக்குமாறு அவரது சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.
விசாரணைகளை மேற்கோள்காட்டி, பிணைக் கோரிக்கையை நிராகரிக்குமாறு CID திணைக்களம் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
ஆயினும் அக்கோரிக்கையை நிராகரித்த நீதவான் ஜோன்ஸ்டன் பெனாண்டோவை பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.
முன்னணி நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் வாகன தரிப்பிடத்தில் சந்தேகத்திற்கடமான வகையில் BMW ரக அதிசொகுசு கார் ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கடந்த ஒக்டோபர் 23ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகி வாக்கு மூலம் வழங்கிய நிலையில் ஜோன்ஸ்டன் பெனாண்டோ கைது செய்யப்பட்டிருந்தார். அன்றையதினம் அவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கில் முன்னிலையாகாமை தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றினால் பிடியாணை ஒன்றும் பிறப்பிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, குறித்த வாகனம் சட்ட ரீதியாக பதியப்பட்ட ஒன்று அல்ல எனவும் இங்கிலாந்தில் களவுக்கு உட்பட்ட ஒரு வாகனமெனவும் பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
குறித்த வாகனத்தின் அடிச்சட்ட (செஷி) இலக்கம் சர்வதேச பொலிஸாரின் தரவு கட்டமைப்பின் ஊடாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போது அது 2021ஆம் ஆண்டு இங்கிலாந்தில் களவு சென்ற ஒரு வாகனமென தெரியவந்துள்ளது.
குறித்த வழக்கு பெப்ரவரி 05ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.