2024 ஆம் ஆண்டு இடம்பெற்ற பத்தாவது பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட புதிய உறுப்பினர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வு நவம்பர் 25, 26, 27ஆம் திகதிகளில் மு.ப 9.30 மணி முதல் பி.ப 4.30 மணி வரை பாராளுமன்ற குழு அறை இலக்கம் 01இல் நடத்தப்படவுள்ளது.
புதிய பாராளுமன்றத்தின் ஆரம்பத்தில் சம்பிரதாயபூர்வமாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கையாக இந்த செயலமர்வு இம்முறையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளை (25) திங்கட்கிழமை மு.ப. 9.30 மணிக்கு இடம்பெறும் இந்த செயலமர்வின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல, பிரதி சபாநாயகர் வைத்தியகலாநிதி மொஹமட் றிஸ்வி சாலி, குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, ஆளும் கட்சியின் முதற்கோலாசான் அமைச்சர் வைத்தியகலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ, பாராளுமன்ற செயலாளர் நாயகம், பிரதிச் செயலாளர் நாயகம் மற்றும் உதவிச் செயலாளர் நாயகம் உள்ளிட்டவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்த மூன்று நாள் செயலமர்வில் பாராளுமன்ற உறுப்பினர்களின் வகிபாகம், பாராளுமன்ற சிறப்புரிமைகள், பாராளுமன்றத்தின் சட்டவாக்க செயற்பாடுகள், பாராளுமன்ற குழு முறைமை, பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள், அரசியலமைப்பின் ஏற்பாடுகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இலத்திரனியல் வாக்களிப்பு முறை குறித்த நடைமுறை அமர்வொன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது.
அத்துடன், ஊழலுக்கு எதிரான சட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்தும், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சின் பாராளுமன்ற விவகாரப் பிரிவின் பங்கு குறித்தும் இங்கு தெளிவுபடுத்தப்படவுள்ளது.