அம்பாறை மாவட்டம் காரைதீவைச்சேர்ந்த நாடறிந்த சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளருமான தேசமான்ய விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா கிழக்கு மாகாண பல்துறை வித்தகர் விருது நேற்று ( 2024.12.11) புதன்கிழமை வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழா நேற்று (11.12.2024) புதன்கிழமை திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் நடைபெற்றபோதே இக் கௌரவ விருது வழங்கப்பட்டது.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் தலைமையில் நடைபெற்ற விழாவில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்த லால் ரத்னசேகர இவ் உயரிய விருதை வழங்கி வைத்தார்.
அவருக்கான அலங்காரமாலையை கிழக்கு மாகாண பிரதம செயலாளர் R.M.P.S ரத்நாயக்க அணிவிக்க கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் H.E.M.W.G திசாநாயக்க பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
நிகழ்வில் அமைச்சுக்களின் செயலாளர்களான மதன்நாயக்க கோபாலரெத்தினம் நசீர் குணநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது கிழக்கு மாகாணத்தில் 2022,2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் தெரிவு செய்யப்பட்ட பல துறைகள் சார்ந்தவர்கள் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள் .
கிழக்கு மாகாணத்தின் உயரிய விருதான “வித்தகர்” விருதினை பெற்றார்
காரைதீவைச் சேர்ந்த பிரபல ஊடகவியலாளரும் ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளருமான தேசமான்ய விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா அவர்கள்.
வித்தகர் வி.ரி.சகாதேவராஜா
36 வருடங்கள் கல்விப் பணியாற்றிய திரு சகாதேவராஜா,சம்மாந்துறை வலயத்தில் 26 வருடங்களுக்கு மேலாக சேவையாற்றி வெள்ளி விழாக் கண்ட ஒரே ஒரு உதவிக் கல்விப் பணிப்பாளரும், சம்மாந்துறை வலய கல்வி சார் உத்தியோகத்தர்கள் நலன்புரி ஒன்றியத்தின் தலைவருமாவார்.
இவர்
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் மிகவும் நெருங்கிய பற்றாளனான இவர் பத்து வருடங்கள் காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் ஆசிரியராகவும் சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனையில் 26 வருடங்கள் உதவிக் கல்விப் பணிப்பாளராகவும் சேவையாற்றியுள்ளார் .
பேராதனை பல்கலைக்கழக கலைத்துறை பட்டதாரியான இவர் மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலையில் பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிரியராவார். பட்டப்பின் கல்வி டிப்ளோமோ மற்றும் கல்வி முதுமாணிப் பட்டம் பெற்றவராவார்.
இலங்கை அதிபர் சேவையின் முதலாந்தர அதிபராவார்.
இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத் தலைவராக அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத் தலைவராக காரைதீவு விபுலானந்தா ஞாபகார்த்த பணிமன்றத் தலைவராக இந்துசமய விருத்திச்சங்க தலைவராக காரைதீவு விளையாட்டு கழகத் தலைவராக கம்பன் கலைக்கழகத் தலைவராக கிராம அபிவிருத்தி சங்க தலைவராக இவ்வாறு பல அமைப்புகளில் தலைவராக முன்னணி சமூக செயற்பாட்டாளரான அவர் ஒரு தலைசிறந்த ஊடகவியலாளரும் கூட.
சம காலத்தில் மேற்குறிப்பிட்ட அமைப்புகளின் ஆலோசகராக மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய பரிபாலன சபையின் ஆலோசகராக இவ்வாறு பல நடிபங்குகளினூடாக சமூக சமய சேவையாற்றி வருகிறார்.
காரைதீவின் பழம் பெரும் ஆசிரியர் வே.தம்பிராஜா தங்கநாயகம் தம்பதிகளின் கனிஸ்ட புதல்வராவார்.
காரைதீவில் 1964.09.28 அன்று பிறந்தார் .
ஆரம்பக் கல்வியை ராமகிருஷ்ணசங்க ஆண்கள் பாடசாலையிலும் பின்னர் விபுலானந்த மத்திய கல்லூரியிலும் மற்றும் மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயத்திலும் கல்வி பயின்றார்.
“ஊழியில் ஆழி” எனும் வரலாற்று நூலை 2005 வெளியிட்டார். மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையில் முத்தமிழ் மன்ற தலைவராக பணியாற்றிய வேளை அங்கு “கலைச்செல்வி” நூலுக்கு நூலாசிரியராகவும் சுவாமி விபுலானந்த பணிமன்றத்தின் அடிகளார் நினைவாலய மலருக்கும் சுவாமி நடராஜானந்தா ஜீயின் நூற்றாண்டு விழாவில் சேவையின் சிகரம் எனும் நூலையும் ஊரா வெளியிட்டிருக்கின்றார்.
இலங்கையின் அதிசிறந்த ஊடக விருதான மக்கள் சேவை ஊடக விருது 2007 வீரகேசரி கட்டுரை வெளியீட்டுக்காக பெற்றார் . இத்தாலி பாங்க்கொக் மலேசியா சிங்கப்பூர் பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கு சென்று சிறப்பு அனுபவத்தை பெற்றிருந்தார்.
தேசமான்ய வித்தகர் திகாமடுல்ல அபிமானி விபுலமாமணி வாழ்நாள் சாதனையாளர் வித்யசாஹித்யன் வித்யகலாசிறி கலைச்செம்மல் போன்ற இன்னோரன்ன விருதுகளைப் பெற்றவர்.
அவர் மேலும் ஆன்மீக சொற்பொழிவு மற்றும் பிரசங்கங்களில் ஈடுபட்டு வருகிறார்.