“ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நான் மஹிந்த ராஜபக்ஷ என்பதை மறந்துவிட்டார். எவ்வாறாயினும், எந்த நேரத்திலும் உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேற நான் தயாராக இருக்கிறேன்” என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
டெய்லிமிரர் செய்தித்தாளிடம் பேசியுள்ள முன்னாள் ஜனாதிபதி, அமைச்சரவைத் தீர்மானத்தின் அடிப்படையிலேயே தனக்கு இந்த உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்பட்டதாகவும், அது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்டதாகவும் கூறினார்.
தனது தனிப்பட்ட பாதுகாப்புக்காகவும் முன்னாள் அரச தலைவர்களுக்கு இதுபோன்ற வசதிகளை தொடர்ந்து வழங்கும் அடிப்படையிலும், ஓர் அதிகாரப்பூர்வ வீடு தனக்கு வழங்கப்பட்டதாகவும் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
இந்த வீட்டை, தான் பலவந்தமாக வைத்திருக்கவில்லை என்றும் தனது வெளியேற்றத்தால் ஜனாதிபதி அநுரகுமார பயனடைந்தால், உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறத் தான் தயாராக இருப்பதாகவும், முன்னாள் ஜனாதிபதி கூறுகிறார்.
அநுரகுமார திசாநாயக்கவே தற்போது இந்த நாட்டின் ஜனாதிபதி என்றும் அவரது நடத்தை, எதிர்க்கட்சி அரசியல்வாதியின் நடத்தையிலிருந்து வேறுபடவில்லை என்றும் மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.
ஜனாதிபதி அநுரகுமார, தான் மஹிந்த ராஜபக்ஷ என்பதை மறந்துவிட்டார் என்பதை வலியுறுத்திய முன்னாள் ஜனாதிபதி, அவரது உரைகள் அரங்குக்குதான் நல்லது என்றும் கூறினார். எழுத்துப்பூர்வ அறிவிப்பு வழங்கப்பட்டால், எந்த நேரத்திலும் உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறத் தான் தயாராக இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி கூறினார்.
மிகவும் கடினமான காலங்களில் நாட்டுக்காகச் செயற்பட்ட ஜனாதிபதியாகவும் போரை முடிவுக்குக் கொண்டுவந்து நாட்டை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு வந்தவராகவும் தான் இருந்ததாக, முன்னாள் ஜனாதிபதி மேலும் நினைவு கூர்ந்தார்.