கத்தோலிக்க திருச் சபையின் தலைவரான பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ் அவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வத்திக்கான் செய்திகள் தெரிவிக்கின்றன.
சுவாசக் குழாய் அழற்சி காரணமாக பரிசுத்த பாப்பரசர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவரது உடல்நிலை தொடர்ந்தும் கவலைக்கிடமாக காணப்படுவதாக அந்த செய்திகள் நேற்று தெரிவித்தன.
சுகவீனம் காரணமாக கடந்த 14ஆம் திகதி ரோம் நகரிலுள்ள ஜெமெல்லி வைத்தியசாலையில் பரிசுத்த பாப்பரசர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். வைத்திய பரிசோதனையில் அவருக்கு நுரையீரலில் நியூமோனியா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஒரு வாரம் கடந்துள்ள நிலையிலும், நேற்று வரை அவருக்கு தொடர் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
தனது நிலைமை தொடர்பில் மக்களுக்கு அறிவிக்குமாறு பரிசுத்த பாப்பரசர் தெரிவித்திருந்தமைக்கு அமைய, வத்திக்கான் தொடர்சியாக அவரது நிலைமை குறித்து அறிவித்து வருகின்றது.
இந்நிலையில், தனக்காக பிரார்த்தனை செய்யுமாறு பாப்பரசர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.