தற்பொழுது இலங்கை அரசியலில் முக்கிய பேசு பொருளாக இருப்பது கூட்டரசாங்கம் தொடர்பானதே. இது வெறுமனே சர்வதேசத்தை ஏமாற்றுவதற்காக ஜனாதிபதியினால் கதை திரைக்கதை வசனம் எழுதி உருவாக்கப்பட்டுள்ள புதிய திரைப்படமாகும்.என மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினருமான ஆர்.ராஜராம் தெரிவித்துள்ளார்.
இந்த திரைப்படத்தை 100 நாட்கள் திரையரங்கில் திரையிட்டு வெற்றி பெறவதே ஜனாதிபதியின் திட்டமாகும்.இது வெறுமனே ஒரு திரைப்படமே தவிர மக்கள் நலன் சார்ந்த உண்மையான செயற்பாடாக இதனை பார்க்க முடியாது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹ உண்மையிலேயே இந்த நாட்டு மக்கள் மீது அக்கறை கொண்டவராக இருந்தால் முதலில் தற்பொழுது ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்சினை அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு போக்குவரத்து பிரச்சினை சுகாதாரம் தொடர்பான பிரச்சினை இதனை நிவர்த்தி செய்வதற்கு குழு ஒன்றை அமைத்து தீர்வை பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும்.
ஆதனை விடுத்து காலத்தை கடத்துகின்ற செயற்பாடுகளை முன்னெடுப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்.மக்களுடைய எதிர்பார்ப்பு அவர்களை நிம்மதியாக வாழ்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே.
நல்லாட்சி அரசாங்கத்தில் ரணில் பிரதமராகவும் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும் இருந்த பொழுது ஒற்றுமையாக செயற்பட முடியாதவர்கள் இப்பொழுது எப்படி இணைந்து மக்கள் நலன் கருதி செயற்படுவாரட்கள் என்பது கேள்விக்குறியே?
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹ தற்பொழுத ஐக்கிய தேசிய கட்சியை கட்டியெழுப்புவதையே குறிக்கோளாக கொண்டு செயற்படுவதை காண முடிகின்றது.மேலும் அவசர கால சட்டத்தை நீடித்து போராட்டக்காரர்களை அடக்குவதற்கும் அவர்களை கைது செய்வதற்கும் நடவடிக்கை எடுத்து வருகின்றார்.
எனவே இன்றைய நிலையில் முக்கிய விடயங்களாக இவை?மக்கள் அன்றாடம் தங்களுடைய வாழக்கையை கொண்டு செல்ல முடியாமல் தவித்து வருகின்றார்கள்.நாள்தோறும் வரிசைகளில் மரணங்கள் நிகழ்கின்றது.மொட்டு கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இப்பொழுது தங்களுக்கு பாதுகாப்பு இருப்பதை கருதி ஊடகங்களில் வீரர்களாக மாறியிருக்கின்றார்கள்.
எனவே இந்த அனைத்து விடயங்களையும் ஒரு புறம் மூட்டை கட்டிவைத்துவிட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு உண்மையாக தீர்வை பெற்றுத் தருவதற்கு முயற்சி செய்யுங்கள்.நேரத்தையும் காலத்தையும் வீணடித்து திரைப்படங்கள் தயாரிப்பதை நிறுத்துங்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரமணன்