நீண்ட காலமாக கண்டிக்கும் -கொழும்பிற்குமிடையே சேவையில் ஈடுபட்டு வந்த சொகுசு கடுகதி (இன்டர்சிட்டி) புகையிரத சேவைகள் குறைந்த வசதிகள் மற்றும் மெதுவான வேகம் கொண்ட ரயில்களாக மாற்றப்படுவதாகவும், இதனால் சரியான நேரத்தில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறி, இலங்கை வரலாற்றில் முதல் முறையாக (வெள்ளிக்கிழமை 07) புகையிரதத்திற்குள் ஏறி பயணிகள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு பத்திரிகையாளர் சந்திப்பையும் மேற்கொண்டனர்
மேற்குறிப்பிட்ட புகையிரதம் தினமும் காலை 6:15 மணிக்கு கண்டியிலிருந்தும், மாலை 3:35 மணிக்கு கொழும்பிலிருந்தும் புறப்படும். மேற்படி புகையிரதத்தில் தினந்தோறும் பொதுமக்கள் மருத்துவர்கள் சட்டத்தரணிகள் அரச அதிகாரிகள் ஊழியர்கள் வியாபாரிகளும் வழமையாக பயணம் மேற்கொண்டுவந்தனர்
நவீன வசதிகள் கொண்ட S 14 என்ற புகையிரதமே இதுவரையில் சேவையில் ஈடுபடுத்த பட்டுவந்த நிலையில் குறித்த புகையிரதத்தினை வேறு பாதைக்கு மாற்றப்பட்டு ,அதற்கு பதிலாக குறைந்த வசதிகள் கொண்ட S 12 புகையிரதம் தற்பொழுது சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது
முன்பு சேவையில் ஈடுபட்ட புகையிரதம் சரியான நேரத்தில் கொழும்பை சென்றடைவதால் தங்கள் பணிகளை சிறப்பாக தொடர்ந்து வந்ததாகவும் தற்போதைய புகையிரதம் சுமார் ஒரு மணித்தியாலயத்திற்கு மேல் காலதா மதமாகுவதால் தொழில் ரீதியாக பல்வேறு சிரமங்களை எதிர் கொள்ளவேண்டியுள்ளதாகவும்
முதல் வகுப்பில் சில பெட்டிகளில் குளிர்சாதன வசதி கூட இல்லை, மேலும் சுகாதார வசதிகளும் மோசமான நிலையில் உள்ளன.பல பெட்டிகளில் இருக்கைகள் கிழிந்து,காணப்படுவதோடு முதல் வகுப்பில் கூட இருக்கைகளில் உட்கார முடியாது சரியான தண்ணீர் வசதி இல்லாததால், கழிப்பறைகள் துர்நாற்றம் வீசுவதாகவும், இருக்கை ஒதுக்கீடு முதல் பல முறைகேடுகள் நடப்பதாகவும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும், பேராதனை ரயில் நிலையத்தில் மேடை தாழ்வாக அமைந்துள்ளமையால் பயணிகள் ரயிலில் ஏறவும், இறங்கவும் சிரமப்பட்டதாகவும், இதனால் பெண்கள், முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானோர் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகவும் புகையிரதத்தில் இறங்க முயற்சிக்கும் சந்தர்ப்பங்களில் வழுக்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்துளதாகவும் அவர்கள் மேலும் கூறினர்
மேற்படி புகையிரதத்தில் தொடர்ந்து ஒன்று முதல் 30 வருடங்களுக்கு மேலாக பயணித்துவரும் 400.பயணிகள் இணைந்து இப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக் கோரி, ஜனாதிபதி,, போக்குவரத்து அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்த போதிலும், யாரும் இதுவரை பதிலளிக்கவில்லை என்றும் இந்த மக்கள் குற்றம் சாட்டுவதோடு உடனடியாக மேற்படி பிரச்சினைக்கு தீர்வைபெற்று தருமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.