நுவரெலியா மாவட்டத்தில் தொடரும் புறக்கணிப்பு!

0
369

மலையகத்தின் இதயமென கருதப்படுகின்ற நுவரெலியா மாவட்டத்தில் கணிசமாளனவு மலையகத் தமிழர்கள் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தில் மூவினங்களையும் உள்ளடக்கிய வகையில் சுமார் 5 லட்சத்து 77 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். புதிய வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் (2022) இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும்.)

2020 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்திலிருந்து எட்டு பேர் நாடாளுமன்றம் தெரிவாகினர். இதில் ஐவர் மலையகத் தமிழர்கள். அதாவது நுவரெலியா மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றம் தெரிவாகும் எம்.பிக்களில் மூன்றிலிரண்டு பங்கு மலையகத் தமிழர்களுக்கு கிடைக்கும் சாத்தியம் காணப்படுகின்றது. கடந்தகால பெறுபேறுகள் இதற்கு சான்று.

நுவரெலியாவில் உள்ள தமிழ் வாக்காளர்களில் 50 வீதத்துக்கும் மேற்பட்டோர் பெண்கள். மலையகத்தை மையமாக கொண்டு செயற்படும் அரசியல் – தொழிற்சங்கங்களில் மகளீர் அணிகளும் உள்ளன. கட்சி – தொழிற்சங்க அங்கத்துவத்தில் பெண்களின் எண்ணிக்கையே அதிகம் என்கின்றன தரவுகள்.

எனினும், இலங்கை அரசியல் வரலாற்றில் நுவரெலியா மாவட்டத்திலிருந்து இன்னமும் தமிழ் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இன்னமும் தெரிவாகவில்லை. ‘சாத்தியம்’ இருந்தும் – அது திட்டமிட்ட அடிப்படையில் கைநழுவ விடப்பட்டுவருகின்றது.

அதுமட்டுமல்ல நுவரெலியா மாவட்டத்திலிருந்து ஒரேயொரு பெண் எம்.பி. மட்டுமே இதுவரை (மக்கள் வாக்களிப்புமூலம்) நாடாளுமன்றம் தெரிவாகியுள்ளார். (ரேணுகா ஹேரத் – சிங்களம் ). 1977 இல் செல்வி சிறியாணி டேனியலுக்கு (ஹேவாஹெட்ட தொகுதி) நியமன எம்.பி. பதவி வழங்கப்பட்டது. அந்தவகையில் நுவரெலியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இரு எம்.பிக்கள் இருந்துள்ளனர்.

( 1977 இல் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்ற ரேணுகா ஹேரத் 2010 வரை சபையில் அங்கம் வகித்தார். இவரின் மகள் கடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்டாலும் வெற்றிபெறவில்லை. ரேணுகா ஹேரத் ஐ.தே.கவின் தீவிர செயற்பாளராக இருந்தார்)

கண்டி, இரத்தினபுரி, கேகாலை, மாத்தளை, களுத்துறை போன்ற மலையக தமிழ் வாக்காளர்கள் வாழும் மாவட்டங்களில், ஒரு நாடாளுமன்ற உறுப்புரிமையை தக்கவைத்துக்கொள்வதே பெரும் சவால். எனவே, நுவரெவியா மாவட்டத்திலிருந்து மலையக தமிழ் பெண்ணொருவர் நாடாளுமன்றம் செல்லும் நிலை உருவாக வேண்டும். அம்மாவட்டத்திலேயே அதற்கான வெற்றி வாய்ப்பு அதிகம்.

பிரதான தேசியக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து களமிறங்கும் மலையக பிரதான கட்சிகள் தமது வேட்பாளர் பட்டியலில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். கடந்த தேர்தலில் இந்நிலைமை இருக்கவில்லை. அமரர் சந்திரசேகரனின் மகளான அனுசா சந்திரசேகரன் சுயேட்சையாக களமிறங்கினார். எனினும், வெற்றிபெறவில்லை. பதுளை மாவட்டத்திலும் ஆணாதிக்கம்தான்.

மலையக பெண் எம்.பி. என்பது கனவு அல்ல, அது அடையக்கூடிய இலக்குதான். தேசியப்பட்டியல் ஊடாகவேனும் வாய்ப்பு வழங்கலாம்.

1947 இல் மலையக பிரதிநிதிகள் போட்டியிட்டனர். 48 இல் குடியுரிமை பறிக்கப்பட்டது. 52, 56 தேர்தல்களில் போட்டியிடவில்லை. 60 மற்றும் 65 ஆம் ஆண்டுகளில் சௌமியமூர்த்தி தொண்டமானுக்கு நியமன எம்.பி. பட்டியல் வழங்கப்பட்டது. 70 இல் அந்த வாய்ப்பு அலீசுக்கு கிட்டியது. 77 இல் நுவரெலியா மாவட்டத்தில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு தொண்டமான் வெற்றிபெற்றார். அதன்பின்னர் பல தடவைகள் தேசியப்பட்டியல் வாய்ப்புகள் வழங்கப்பட்டாலும், ஆண்களே அந்த இடத்துக்கு நியமிக்கப்பட்டனர்.

தொழிலாளர் தேசிய சங்கத்துக்கு 2010 இல்தான் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் கிட்டியது. 2015, 2020 இல் (தமிழ் முற்போக்கு கூட்டணியாக) வெற்றி கிட்டியது. தேசியப்பட்டியல் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

நாடாளுமன்றத்தில் பெண் பிரதிநிதித்துவம்

இலங்கையில் முதலாவது பெண் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி அட்லின் மொலமுறே. 1931 – 1935 வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். திருமதி நேசம் சரவணமுத்து முதலாவது தமிழ் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்.

இலங்கையில் முதலாவது நாடாளுமன்றத் தேர்தல் 1947 இல் நடைபெற்றது. மூன்று பெண் எம்.பிக்கள் வெற்றிபெற்றனர்.

1952 இல் நடைபெற்ற தேர்தலில் இரு பெண்களும், 1956 இல் நடைபெற்ற தேர்தலில் நான்கு பெண்களும், 1960 இல் நடைபெற்ற தேர்தலில் மூன்று பெண்களும், 1965 இல் நடைபெற்ற தேர்தலில் ஆறு பெண்களும், 1970 இல் நடைபெற்ற தேர்தலில் ஆறு பெண்களும் நாடாளுமன்றம் தெரிவாகினர்.

1977 இல் 11 தமிழ் எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்தனர். இதில் ஆறு பெண்கள் நியமன எம்.பிக்கள்.

1989 இல் நடைபெற்ற தேர்தலில் 12 பெண்கள் வெற்றி பெற்றனர். ஒருவர் தேசியப்பட்டியல் ஊடாக வந்தார். சபையில் மொத்தமாக 13 பெண் எம்.பிக்கள் செயற்பட்டனர்.

1994 இல் 12 பெண்களும், 2000 ஆண்டு ஆண்டு 9 பெண்களும், 2001 இல் 10 பெண்களும், 2004 இல் 13 பெண்களும் நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்தனர்.

2010 தேர்தலில் 10 பெண்கள் வெற்றி பெற்றனர். மூவர் தேசியப்பட்டியல் ஊடாக தெரிவாகினர். சபையில் மொத்தம் 13 பெண் எம்.பிக்கள் அங்கம் வகித்தனர்.

2015 பொதுத்தேர்தலில் 11 பெண்கள் வெற்றிபெற்றனர். இருவருக்கு தேசியபட்டில். மொத்தம் 13 பேர்.

2020 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் 9 பேர் வெற்றிபெற்றனர். தேசியப்பட்டியலில் 3 பெண்களுக்கு இடம். 12 பெண் உறுப்பினர்கள் செயற்படுகின்றனர்.

ஆர்.சனத்-    [email protected]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here