நாட்டில் ஊழல் முற்றாக ஒழிக்கப்படவேண்டும் என்றும் ஊழல்வாதிகள் விரட்டியடிக்கப்பட வேண்டும் என்றும் தொடர்ச்சியாக குரல் எழுப்பப்பட்டு வருகிறது.
ஆனாலும், அது அத்தனை இலகுவான காரியம் அல்ல. ஏனென்றால், ஊழல்புரிந்து அதில் ருசி கண்டோரும் ஊழலுக்காக துணைபோவோரும் அதனைக் கண்டும் காணாமல் இருப்போரும் இருக்கும்வரை அது சாத்தியமற்றது.
கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பத்தனை ஸ்ரீ காட்டுமாரியம்மன் ஆலய முன்றலில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டடம் இதற்கு ஒரு சான்றாகும்.
நுவரெலியா மாவட்டம், ஹட்டன் நகரிலிருந்து சுமார் 11.6 கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கிறது காட்டுமாரியம்மன் கோயில். கூரை அமைக்கப்பட்ட பெரிய ஆலயம், மண்டபம் எதுவும் இல்லாமல் காணப்படும் அந்தக் கோயில் சாதாரண வழிபாட்டு இடமாகும்.
அந்தக் கோயிலுக்குச் செல்லும் நுழை வாயிலானது பிரதான வீதியில் மிக உயரமாக அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து சிறிய பாதை வழியாக காட்டுமாரியம்மன் கோயிலுக்கு நடைபாதையில் செல்லவேண்டும்.
இந்தப் பிரதான வாயிலுக்கு அருகில் புதிதாக முளைத்துள்ள கட்டடமானது அண்மைக்காலமாக அப்பகுதி மக்களால் பரவலாக பேசப்படுவதாக மாறியுள்ளது. சுருக்கமாகச் சொல்வதானால், பிரதேச சபைத் தலைவருக்கோ, பிரதேச சபைக்கோ தெரியாமல் அந்தக் கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.
என்ன? சந்தேகம் எழுகிறதா?
வாருங்கள் இந்த விடயத்தை விரிவாகப் பார்ப்போம்.
கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களாக கொட்டகலை, பத்தனை, வட்டகொடை ஆகியன காணப்படுகின்றன. இந்தப் பகுதிகள் ஏற்கனவே நுவரெலியா பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்டே காணப்பட்டன. எனினும், மேலதிக பிரதேச சபைகள் அமைக்கப்பட்டதன் காரணமாக கொட்டகலை பிரதேச சபை தனியாக்கப்பட்டு அந்த பிரதேச சபைக்குக் கீழ் பிரதான மூன்று நகரங்கள் உள்வாங்கப்பட்டன.
நாம், மேலே குறிப்பிட்ட பத்தனை காட்டுமாரியம்மன் கோயிலும் கொட்டகலை பிரதேச சபை எல்லைக்குட்பட்டதாகும்.
ஹட்டன் – தலவாக்கலை பிரதான வீதியில் அமைந்துள்ள காட்டுமாரியம்மன் கோயில் நுழைவாயிலுக்கு அருகில் ஐந்து கடைத் தொகுதிகள் கொண்ட கட்டடம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்டடத்தை நிர்மாணித்தவர்கள் யார்? அதற்கு அனுமதி வழங்கியவர்கள் யார்? இப்போது அந்தக் கட்டடத்துக்கு உரிமை கோருபவர்கள் யார்? என்ன நோக்கத்துக்காக கட்டப்பட்டது? போன்ற கேள்விகளுக்கான பதில் இல்லை.
தங்ளுடைய ஆளுகைக்கு உட்பட்ட இடமல்ல என்பதுபோல் கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் இராஜமணி பிரசாந்த் நடந்துகொள்கின்ற விதமும் இது தொடர்பில் அவரது முன்னுக்குப் பின் முரணான பதில்களும் அவர் மீது சந்தேகத்தை எழுப்பியுள்ளன.
<<ஆரம்ப கால செயற்பாடுகள்>>
தலவாக்கலையில் இயங்கிவந்த சமுர்த்தி வங்கிக் கிளைக்கு வருகைதருவோர் ஏனைய பகுதிகளிலிருந்து பல கிலோ மீற்றர் தூரம் பயணிக்க வேண்டியிருந்தது. அந்த வாடிக்கையாளர்களின் நலன் கருதி, மத்திய பகுதியொன்றில் சமுர்த்தி வங்கி அமையவேண்டும் என வங்கி நிர்வாகத்தினால் ஆலோசனை முன்வைக்கப்பட்டது.
அதனடிப்படையில் பத்தனை காட்டுமாரியம்மன் கோயில் நுழைவாயிலுக்கருகில் உள்ள பகுதி மத்திய இடமாக பரிந்துரைக்கப்பட்டு அங்கு வங்கிக் கிளையொன்றையும் மக்களின் நலன்கருதி கடைத் தொகுதிகளையும் நிர்மாணிப்பதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. அதற்கிணங்க, அவ்வாறு கட்டடத்தொகுதியொன்றை அமைப்பதற்கு மாவட்ட செயலகம் உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கு கோரிக்கை கடிதங்கள் சமுர்த்தி வங்கியினால் அனுப்பிவைக்கப்பட்டிருந்தன. இந்தச் செயற்பாடுகள் கடந்த 2015ஆம் ஆண்டுமுதல் ஆரம்பிக்கப்பட்டன.
அதன்பின்னர் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கை கடந்த 2018ஆம் ஆண்டு பெறப்பட்டுள்ளது. அதற்கென 21 ஆயிரத்து 852 ரூபா 99 சதம் (21,852.99) பணம் சமுர்த்தி வங்கி முகாமையாளரால் 2018.03.14 அன்று செலுத்தப்பட்டுள்ளது.
அதன்பின்னர், குறித்த இடம் கட்டடம் அமைப்பதற்கு பொருத்தமானதென உறுதிப்படுத்தி, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் புவியியலாளர் மாலக்க ஹெட்டியாராச்சியினால் 2018.06.28 அன்று திகதியிடப்பட்ட உறுதிக்கடிதம் வழங்கப்பட்டிருந்தது.
எனினும், கட்டடம் அமைப்பதற்குரிய அனுமதி பிரதேச செயலாளரால் வழங்கப்பட்டிருக்கவில்லை. இதனைச் சுட்டிக்காட்டி சமுர்த்தி வங்கிக் கிளையை காட்டுமாரியம்மன் ஆலய பிரதான வீதியில் அமைப்பதற்கு அனுமதிக்குமாறு கோரி தலவாக்கலை சமுர்த்தி வங்கியினால் 2021.09.07ஆம் திகதி பிரதேச செயலாளருக்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டது.
அதன்பின்னர் என்னவாயிற்று?
இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், அங்கே யாரோ ஒரு தரப்பினரால் கட்டடம் கட்டியெழுப்பப்பட்டது. ஐந்து கடைத் தொகுதிகளைக் கொண்டு அந்தக் கட்டடம் நிர்மாணிக்கப்பட்டது.
கொட்டகலை பிரதேச சபையின் தலைவர், உறுப்பினர்கள், அதிகாரிகள் என நாளாந்தம் பயணிக்கும் பிரதான வீதியிலேயே இவ்வாறு கட்டடம் நிர்மாணிக்கப்பட்டது. எனினும், பொறுப்புக்கூற வேண்டிய பிரதேச சபைத் தலைவர் இதனைக் கண்டும் காணாததுபோல் இருந்துள்ளார்.
இந்நிலையில், பிரதேச சபையின் மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் எஸ்.ராஜா, இந்த விடயம் குறித்து பிரதேச சபைத் தலைவரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு கிடைத்த பதில்கள் பாரிய சந்தேகங்களை எழுப்பியுள்ளன.
இந்தக் கட்டடத்துக்கு கொட்டகலை பிரதேச சபையினால் அனுமதி வழங்கப்படவில்லையென அதன் தலைவர் இராஜமணி பிரசாந்த் தெரிவித்துள்ளார். இந்தக் கட்டடம் தொடர்பில் எழுத்து மூலமாகவோ, வாய்மொழி மூலமாகவோ முறைப்பாடு கிடைக்கப்பெற்றால், சபையினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக கோயில் நிர்வாகத்துடன் தொடர்புகொண்டதன் மூலம் 2008ஆம் ஆண்டு நுவரெலியா பிரதேச சபையினால் அனுமதி வழங்கப்பட்ட கட்டட விண்ணப்பப்படிவம் பிரதேச சபைக்கு வழங்கப்பட்டது எனவும் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
<<இல்லாத நிர்வாக சபை எங்கிருந்து வந்தது?>>
பத்தனை, காட்டுமாரியம்மன் கோயில் இந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்படவில்லை. அது வழிபாட்டு இடமாகும்.
அங்கு இதுவரைகாலமும் நிர்வாக சபையொன்றும் இருக்கவில்லை. அவ்வாறாயின், இராஜமணி பிரசாந்த் குறிப்பிடும் நிர்வாக சபையினர் யார்? இதுவரை இல்லாத நிர்வாக சபை இப்போது எங்கிருந்து வந்தது?
<<சூட்சுமமான விளையாட்டு>>
இந்தப் பிரச்சினை பாரதூரமாகிறது என்பதை அறிந்துகொண்ட பிரதேச சபைத் தலைவரும் அவர் சார்ந்தோரும் காட்டுமாரியம்மன் கோயிலுக்கு தங்களுக்கு நெருக்கமானவர்களைக் கொண்டு நிர்வாக சபையொன்றை அமைக்க முயற்சித்தனர். இந்த இரகசியமும் அம்பலமாகிவிட மாவட்ட செயலாளரின் உத்தரவுக்கமைய நிர்வாக சபைக்கான கூட்டம் கடந்த 25ஆம் திகதி திங்கட்கிழமை பத்தனை ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய மண்டபத்தில் இடம்பெற்றது.
புதிதாக அடையாளந்தெரியாதோரால் நிர்வாக சபையொன்று உருவாக்க முயற்சிப்பதாக டெவோன் தோட்ட மக்களால் இதன்போது குற்றஞ்சுமத்தப்பட்டது. இதனையடுத்து பல்வேறு தரப்பினரும் மாற்றுக்கருத்துகளை தெரிவித்ததால் கூட்டம் இடைநடுவில் கைவிடப்பட்டது.
இதேவேளை, சர்ச்சைக்குரிய இந்தக் கட்டடத் தொகுதி யாரால் அமைக்கப்பட்டது எனக் கேள்வி எழுப்பி, பொதுமக்களால் ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
எமக்குக் கிடைத்த தகவல்கள்
எமக்குக் கிடைத்த தகவல்களின் பிரகாரம், இந்தக் கட்டடமானது அப்பகுதியிலுள்ள பிரபலமான ஹார்ட்வெயார் நிறுவனத்தினால் கட்டப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்துக்கு முக்கிய புள்ளிகள் சிலர் பணம் கொடுத்திருக்கிறார்கள்.
சமுர்த்தி வங்கிக் கிளை அமைப்பதற்கான பேச்சுகள், நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், அதனை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டவர்கள் இவ்வாறு கட்டடம் ஒன்றை அமைத்து அதனை விற்பனைசெய்வதற்கு தயாராகியுள்ளார்கள். இந்தக் கட்டடத்தில் ஒரு கடைத்தொகுதிக்கு 25 முதல் 40 இலட்சம் ரூபா வரை பேரம் பேசப்பட்டுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினரான கொட்டகலை பிரதேச சபைத் தலைவர் இந்த விடயத்தில் அசமந்தமாகச் செயற்படுவதன் உண்மைத்தன்மை இதுவாகக்கூட இருக்கலாம் அல்லவா?
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கிய புள்ளியொருவர் இதன் பின்னாலிருந்து செயற்படுவதாக நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன.
கொட்டகலை பிரதேச சபைக்குத் தெரியாமல், பிரதான வீதியில் கட்டடம் ஒன்று அமைக்கப்பட முடியுமா? அனுமதி எதுவும் பெறப்படாமல் கட்டடம் அமைப்பதன் பின்புலத்தில் பணத்துக்காக விலைபோனவர்கள் யார்?
இதற்கான முழுப்பொறுப்பையும் கொட்டகலை பிரதேச சபை ஏற்கவேண்டும். பிரதேச சபையின் தலைவர் இராஜமணி பிரசாந்த், தான் தவறிழைக்கவில்லையென்றால், இந்தக் கட்டடத்தை யார் அமைத்தார்கள் என்பதை வெளிப்படுத்த வேண்டும்.
கொரோனா தொற்றுப்பரவல் காலத்தையும் அதற்குப் பின்னரான நெருக்கடி நிலைமையையும் தமக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சுயநல அரசியல்வாதிகள், மக்கள் அமைதியாக இருந்துவிடுவார்கள் என்று எண்ணி மிகப்பெரிய ஊழலுக்கு துணைபோயிருக்கிறார்கள்.
இந்த விடயத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர்பீடம் என்ன நிலைப்பாட்டில் இருக்கின்றது என்பதை அந்தக் கட்சி உறுப்பினர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையிலிருந்து வெளிப்படும் என மக்கள் காத்திருக்கிறார்கள்.
ஆட்சிப் பலத்தாலும் அரசியல் சாணக்கியத்தாலும் ஊழல்வாதிகள் காப்பாற்றப் படுவார்களாயின், அத்தனைக்கும் மக்கள் அதிகாரம் பதிலடி கொடுக்கும் என்பதை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நினைவிற்கொள்ள வேண்டும்.
-நிர்ஷன் இராமானுஜம்