இலங்கையிலுள்ள கந்தகோட்டங்களுள் ஒன்றாக முக்கியத்துவம் பெறுவதுடன், யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள முப்பெரும் முருக சேஷ்திரங்களுள் ஒன்றாகவும் சிறப்புப் பெறும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா இன்று (02.08.2022) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.
நீண்டகால வரலாற்றுப் பெருமை வாய்ந்த இந்த ஆலயத்தில் பாரம்பரிய சமய கலாசார நடைமுறைக்கு அமைந்த வகையிலேயே நித்திய மற்றும் மகோற்சவ கருமங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவது சிறப்புக்குரியது. இந்த வகையில், பலவருட காலமாக இடம்பெற்று வரும் பாரம்பரிய வழமைக்கு அமைய இவ்வருடமும் கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சியும் மகோற்சவ பத்திரிகையும் கையளிக்கும் நிகழ்வு கடந்த (ஜூலை) 24ஆம் திகதி இடம்பெற்றது.
ஆலய பிரதம குருவும் தொண்டர்களும் பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் சென்று அவற்றைக் கையளித்தனர். வடிவமைக்கப்பட்ட கொடிச்சீலை நேற்று அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் எடுத்து வரப்பட்டு ஆலய பிரதம குருவிடம் ஒப்படைக்கப்பட்டது. இன்று ஆரம்பமாகும் மகோற்சவப் பெருவிழா தொடர்ந்து இருபத்தைந்து நாட்கள் நடைபெறும். பத்தாவது நாளாகிய எதிர்வரும் 11ஆம் திகதி மாலை மஞ்சம் உற்சவமும், 17ஆவது நாளாகிய 18ஆம் திகதி மாலை அருணகிரிநாதர் உற்சவமும், 18ஆவது நாளாகிய 19ஆம் திகதி மாலை கார்த்திகை உற்சவமும், 20ஆவது நாளாகிய 21ஆம் திகதி மாலை கைலாசவாகன உற்சவமும், 21ஆவது நாளாகிய 22ஆம் திகதி மாலை வேல் விமானம் உற்சவமும், 22ஆவது நாளாகிய 23ஆம் திகதி காலை தெண்டாயுதபாணி உற்சவமும் (மாம்பழத் திருவிழா), அதேதினம் மாலை ஒருமுகத் திருவிழாவும், 23ஆவது நாளாகிய 24ஆம் திகதி மாலை சப்பரத் திருவிழாவும், 24ஆவது நாளாகிய 25ஆம் திகதி காலை இரதோற்சவமும், 25ஆவது நாளாகிய 26ஆம் திகதி காலை தீர்த்தோற்சவமும் இடம்பெற்று, மறுநாள் 27ஆம் திகதி பூங்காவன திருவிழாவுடன் இவ்வருட மகோற்சவம் நிறைவுபெறுகிறது.
நல்லூர்க் கந்தன் ஆலயத்தின் வரலாற்றுப் பதிவுகளை நோக்கும்போது, எந்தவொரு காலத்திலும் குறிப்பாக போர்க்காலச் சூழ்நிலைகளின் போதும், கொரோனா கிருமித் தொற்று மேலோங்கியதால் ஏற்பட்ட முடக்க காலத்தின் போதும் ஆலய வருடாந்த மகோற்சவம் ரத்துச் செய்யப்பட்டதாகவோ அல்லது பிற்போடப்பட்டதாகவோ தகவல் இல்லை. திட்டமிடப்பட்டபடி குறிக்கப்பட்ட தினங்களில், குறிப்பிட்ட கால அட்டவணையின் பிரகாரம் ஆலய உள்வீதியில் அனைத்து உற்சவங்களும் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டிருக்கின்றன.
அந்த வகையில் கொரோனா தொற்றுக் காலப்பகுதியான 2020ஆம் ஆண்டு மட்டுப்படுத்தப்பட்ட அடியார்களுடன் மகோற்சவம் நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு (2021) அடியார்கள் எவரும் அனுமதிக்கப்படாத நிலையில் உள்வீதியில் உற்சவம் இடம்பெற்றது. அனைத்து நிகழ்வுகளும் தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்கள் மூலமாக நேரலையாக அடியார்களுக்கு வழங்கப்பட்டிருந்தமை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.
இம்முறை வழமைபோல ஆலய மகோற்சவத்தை சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகத்துடன் இணைந்து யாழ். மாநகர சபையும் மேற்கொள்கிறது. இது தொடர்பாக யாழ். மாநகர சபை முதல்வர் கடந்த வாரம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றையும் நடத்தியிருந்தார். ஆலயத்தின் வீதியைச் சுற்றியுள்ள பகுதிகள் நேற்று முதல் ஆலய வைரவர் சாந்தி பூசை வரையில் (28.08.2022) பொதுப் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டிருப்பதால் இந்த நாட்களில் மாற்றுப் பாதைகளை பயன்படுத்துமாறு முதல்வர் தெரிவித்திருக்கிறார்.
ஆலய வீதியில் வழமைபோல இவ்வருடமும் வியாபார நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருட்டுச் சம்பவங்களை தவிர்க்கும் வகையில் ஆலயச் சூழலில் யாழ். மாநகர சபையால் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கொரோனா கிருமித் தொற்று எச்சரிக்கை காணப்படுவதால் ஆலயத்திற்கு வருகைதரும் ஒவ்வொருவரும் தங்களது சுகாதாரத்தில் கவனம் எடுத்து செயற்படவேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதால் சுகாதார விதிமுறைகளை தவறாது பின்பற்ற வேண்டும் என யாழ். மாநகர முதல்வர் குறிப்பிட்டிருக்கிறார்.
நல்லூர்க் கந்தன் ஆலயத்தின் மகோற்சவம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் இம்முறை சிறப்பாக, பரந்த அளவில் நடைபெறவிருப்பதால் நாட்டின் பல பகுதிகளிலிருந்து மட்டுமல்ல, உலக நாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தரவிருக்கிறார்கள் என அறியமுடிகிறது. இவ்வருடம் அடியார்கள் ஆட்டக் காவடி, துலாக்காவடி போன்ற நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
அ. கனகசூரியர்