கறுப்பு ஜுலை காயங்களால் ஏற்பட்ட தழும்புகள் மாறாத நிலையில் உள்ளது-இரா.ஜீவன்

0
357

இந்த நாட்டுக்கு மிகப்பெரிய அவப்பெயரை ஏற்படுத்திய 1983 ம் ஆண்டு நடைபெற்ற தமிழர்கள் மீதான இனப்படுகொலை நடந்து 39 வருடங்கள் கடந்தபோதும், கெளதம புத்தரின் போதனையை ஏற்றுக்கொண்ட சிங்கள பேரின வாதத்தின் மிகச் சிறிய காடையர் குழுவின் காட்டுமிராண்டிதனத்தால் கறுப்பு ஜுலை காயங்களால் ஏற்பட்ட தழும்புகள் மாறாத நிலையில் உள்ளது.

இன்று கறுப்பு ஜுலையின் நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுவதோடு, அந்த படுகொலையிலிருந்து தமிழ் மக்களை பாதுகாத்து பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைத்த சிங்கள உறவுகளுக்கு நன்றிதெரிவிப்பதற்குமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வானது வரலாற்றில் பதிவு செய்ய வேண்டியதொன்றாகும் என ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பொதுச் செயலாளர் இரா.ஜீவன் இராஜேந்திரன் தெரிவித்தார்.

1983ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தவும், அன்று காடையர்களின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் தமிழர்களுக்கு நேசக்கரம் நீட்டிய சிங்கள உறவுகளுக்கு நன்றி தெரிவிப்பதற்குமாக ஹட்டன் நண்பர்கள் வட்டத்தினரால் கடந்த ஞாயிறு (31) ஹட்டன் கிறிஸ்தவ தொழிலாளர் பொழில் மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்த கறுப்பு ஜுலை நினைவு தினத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே
அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் குறிப்பிட்டவை வருமாறு:-

இந்தக் கலவரத்தில் இந்நாட்டின் வளர்ச்சிக்காக தங்களை வருத்தி உழைத்துக்கொடுத்த அப்பாவி தோட்டத்தொழிலாளர்களும், நிராயுதபாணிகளான தமிழர்களும் காடையர்களால் வேட்டையாடப்பட்டதும், தமிழ்ப்பெண்கள் வன்புனர்வுகளுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதும், தமிழர்களின் சொத்துகள் சூறையாடப்பட்டதும், தங்களுடைய வாழ்விடங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டதும், நாட்டுக்கு மிகப்பெரிய அவப்பெயரை ஏற்படுத்திய கரிநாளாகப் பதிவானது. இன்னொரு பக்கம் தமிழர்களின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கப்பட்டநிலையில் போராட்ட அமைப்புகளிடமிருந்து தூரவிலகி நின்ற தமிழ் இளைஞர்கள் ஆயிரக்கணக்கில் ஆயுதப் போராட்ட இயக்கங்களோடு தங்களை இணைத்துக் கொள்வதற்கான சூழலையும் போராட்டத்தை நியாயப்படுத்துவதற்கான வாய்ப்பையும் இந்த கறுப்பு ஜுலை ஏற்படுத்திக் கொடுத்தது.

அந்தப்போராட்டமே எமது நாட்டை மிக மோசமான நெருக்கடிக்குள் தள்விட்டது. இன்றைய இந்த பொருளாதார நெருக்கடியில் 1983 ம் இனக்கலவரமும் அதைத்தொடர்ந்து எழுச்சிபெற்ற தமிழர் விடுதலைபோராட்டமும் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதை இந்நாட்டின் அரசியல்வாதிகள் மறந்து செயற்படலாகாது

மேலும் இந்த நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டவை என்று நிறுவப்பார்க்கின்றனர். இந்த பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதற்கான காரணங்களை ஆராய்வதற்கும், அதை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகளை தேட முயற்சி நடைபெறுவதாக தெரியவில்லை.

இந்த நாட்டை கடந்த காலங்களில் மாறிமாறி ஆட்சிசெய்த அரசாங்கங்களின் தூரநோக்கற்ற செயற்பாடுகளையே இன்று நாம் அனுபவிக்கின்றோம் இந்த நாடு சுயநல அரசியல்வாதிகளாலும், அவர்களின் ஆதரவை பெற்ற வர்த்தகர்களாலும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன. ஆனால் அவர்களை சட்டத்திற்கு முன் நிறுத்துவதற்கும், சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்ட பணத்தை மீள நாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கபடுவதாக தெரியவில்லை அதேநேரம் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக மக்களின் போராட்டம் இளைஞர்களின் தலைமையில் மிகப்பெரிய போராட்டமாக எழுந்து அமைதியடைந்திருக்கின்றன.

அதை தொடர்ந்து இளைஞர்களை கைது செய்யும் படலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது இளைஞர்கள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தியுள்ளன. இளைஞர்களின் விடயத்தில் மிக கவனமாக நடந்து கொள்ள வேண்டும். அதேநேரம் போராட்டம் எழுந்ததற்கான காரணத்தை நிவர்த்தி செய்யும் வரையும் தங்களுடைய நியாயமான கோரிக்கை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.

அவர்கள் பக்க நியாயத்தை இந்த அரசாங்கம் கவனத்தில் கொள்ளவேண்டும். அதே போல் இங்கு தமிழ் ஆயுதம்போராட்டம் எழுச்சி பெற்று 2009ம் ஆண்டு மெளனிக்கச்செய்யப்பட்டன. ஆனால் போராட்டம் எழுத்தமைக்கான காரணி அப்படியே இருக்கின்றன. அதையும் நிவர்த்திசெய்ய முயற்சிக்கவேண்டும்.

இந்த நிகழ்வை மிக அதிகமான புலனாய்வாளர்கள் அவதானித்துக்கொண்டிருக்கின்றனர். அதேபோல்1991 ம் ஆண்டு முதல் என்னை மிக உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கின்றீர்கள். ஒரு காலத்தில் எங்களை போன்ற இளைஞர்கள் தீவிரவாத அரசியல் செயல்பாடுகளில் ஈடுபட்டதை நாம் மறுக்கவில்லை. நாங்கள் விரும்பி போகவில்லை. 1983ம் ஆண்டு இனப்படுகொலையும், தமிழர்கள் மீதான பாதுகாப்பு அச்சுறுத்தலும், உரிமைமறுப்பு, இனப்பாகுப்பாடு போன்றவையே எங்களை அந்த அரசியல் செயற்பாடுகளுக்கு தள்ளிவிட்டது.

இப்போதே நாங்கள் இளைஞர் பராயத்தை கடந்து வந்துவிட்டோம். ஆனாலும் நாங்கள் இளைஞர்களாக இருந்தபோது அவதானித்த பிரச்சினைகள் அப்படியே இருக்கின்றது . ஆகவே இனியாவது இந்த நாட்டின் எதிர்காலத்தில் அக்கறை கொண்டு தமிழ்பேசும் மக்களின் இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வை தாருங்கள். இந்த நாட்டிற்காக 200 வருடங்களாக உழைத்துக் கொண்டிருக்கும் மலையக தமிழர்களை பொதுபிரகடனத்தின் மூலம் இந்த நாட்டின் பிரஜையாக ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு வாழ்விடம் அமைத்துக்கொள்வதற்கும், வாழ்வாதாரத்திற்கு ஏற்றவகையில் காணியுரிமை வழங்கி, நல்லிணக்கத்தை ஏற்படுத்தவேண்டும்.

இந்த நாட்டில் இன்னுமொரு கறுப்பு ஜுலை வேண்டாம். இன்னுமொரு ஆயுதப்போராட்டம் வேண்டாம். ஆகவே பிரச்சினைகளுக்கு நீதியான நேர்மையான தீர்வை வழங்குவதன் மூலம் இந்நாட்டை வளம்மிக்கதாக மாற்றியமைக்க முடியுமென்றார்.

Eros media unit

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here