நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் 10 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, புத்தளம், கம்பஹா, கேகாலை, கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, கொழும்பு, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு குறித்த சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த எச்சரிக்கை இன்று புதன்கிழமை காலை 10 மணி வரை அமுலில் இருக்கும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
நாட்டின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் மழையுடனான வானிலை இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கங்கைகள் மற்றும் ஆறுகள் பல பெருக்கெடுத்துள்ள நிலையில் வெள்ளப்பெருக்கு ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் மேற்படி கங்கைகள் , ஆறுகளை அண்டிய பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் எனவும் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 – 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.