இலங்கை நாடாளுமன்றத்தில் சுயேட்சையாக செயற்படும் பத்து கட்சிகளின் புதிய கூட்டணியின் தலைமை பொறுப்பை விமல் வீரவன்சவிடம் ஒப்படைக்க பத்து கட்சிகளும் இணக்கம் தெரிவித்துள்ளன என்று கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை புதிய கூட்டணி அமைப்பது தொடர்பாக 10 கட்சிகளின் தலைவர்களுக்கு இடையே சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்றது.
புதிய கூட்டணி விரைவில் அமைக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு கூட்டணிக்கு நான்கு பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன. தற்போது முன்மொழியப்பட்டுள்ள பெயர்களில் மிகவும் பொருத்தமான பெயர் தெரிவு செய்யப்பட்டு எதிர்வரும் கலந்துரையாடலின் போது அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
புதிய கூட்டணியின் தலைவரை நியமிப்பதில் வாய் வீச்சு மற்றும் அரசியல் தொடர்பான பரந்த புரிதல் இருக்க வேண்டும் என்றும் அதற்கு விமல் வீரவன்சவே பொருத்தமானவர் என்று ஊடகம் ஒன்றுக்கு வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
கூட்டணியில் இணைந்து கொள்ள விரும்பும் பல கட்சிகளுடன் எதிர்காலத்தில் பேச்சு நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.