நிர்வாகத் தொகுதிகள் போன்றே தேர்தல் தொகுதி முறைமையும் மலையகத் தமிழருக்கு பாரபட்சமானதாகவே உள்ளது.
-தெரிவுக்குழு அறிக்கை குறித்து திலகராஜ் கருத்து
தேர்தல் தேவைகளுக்காக தொகுதி எல்லை மீள்நிர்ணயத்தை மறுசீரமைக்காது கலப்பு தேர்தல் முறைமையை அறிமுகஞ் செய்வது மலையகத் தமிழருக்கு பாதகமானது. ஏனெனில் நிர்வாகத் தொகுதி பொறிமுறை மாத்திரமல்ல தேர்தல் தொகுதி முறைமையும் மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் பாரபட்சமானதாகவே உள்ளது என முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான மயில்வாகனம் திலகராஜா தெரிவித்துள்ளார்.
தேர்தல் சீர்த்திருத்தத்தை யதார்த்தமாக்கிக் கொள்ளும் நோக்கில், பவ்ரல் அமைப்பு இலங்கை மன்றக் கல்லூரியில் (2/8) சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர், ஆணையாளரின் பிரசன்னத்துடன் ஒழுங்கு செய்திருந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே திலகராஜ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
தேர்தல் முறைமை மாற்றம் குறித்த பாராளுமன்ற தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை வெளிவந்துள்ள போதும் அதனை இன்னும் பாராளுமன்றம் விவாதித்து உறுதி செய்யவில்லை. அதனை உறுதி செய்தால் சுயாதீன தேர்தல் ஆணைக்குழு அதனை நடைமுறைப்படுத்தும் சாத்தியம் உள்ளது.
எனவே அதனை பாராளுமன்றில் இறுதி செய்வதற்கு முன்பதாக அதில் உடன்பாடு தெரிவிக்கப்படாத விடயம் குறித்து கவனம் செலுத்துதல் வேண்டும். அந்த அறிக்கையிலே 80% சதவீதமான விடயங்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய விடயங்களைக் குறிப்பிட்டு 20% சதவீதமான உடன்பட முடியாத விடயங்களையும் உள்ளீர்த்து பாராளுமன்றத்தில் நிறைவேற்றினால் அது சிக்கலை ஏற்படுத்துவதாக அமையும். இந்த இருபது சதவீத பகுதியில்தான் தேர்தல் முறைமையும் எல்லை மீள்நிர்ணயமும் அடங்குகிறது.
இனத்தின், மதத்தின், மொழியின் பெயரில் எனும் அடிப்படையில் கட்சிகளை அமைக்கக் கூடாது என பரவலாக பேசப்படுகிறது. ஆனால், மலையகத் தமிழரைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளின் நோக்கம் இனத்தை பிரதிநித்துவம் செய்வதற்கு அப்பால் அவர்களுக்கு குடியுரிமைப் பறிப்பினால் ஏற்பட்ட அநீதியினாலான உரிமை மறுப்புகளை மீட்பதற்கான அரசியல் செயற்பாடாகவே அமைதல் வேண்டும். அந்த வகையில் அரச நிர்வாக பொறிமுறையை மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் பிரதேச செயலகம் தொகுதிகள் மட்டுமல்ல, மக்களை பிரிதிநிதித்துவம் செய்யும் சபைகளுக்கான வாக்காளர் தொகுதி உருவாக்கத்திலும் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது.
மூன்று தசாப்தங்களுக்கு மேலாக குடியுரிமைப் பறிப்பினால் ஏற்படுத்தப்பட்ட பின்னடைவுகளுக்கு பிராயச்சித்தமாக சிறு தொகுதிகளை அமைத்து அவர்களுக்கு சமவாய்ப்பு வழங்கப்படல் வேண்டும். இது குறித்த யோசனைகளை சிவில் சமூகங்களுடன் இணைந்து நாம் தெரிவுக் குழுவுக்கு வழங்கி இருந்தோம். ஆனால், பாராளுமன்ற தெரிவுக்குழு அறிக்கையிலே எல்லை மீள்நரணயம் குறித்து தெளிவாக ஏதும் பேசப்படவில்லை. அதனால் எல்லை மீள்நிரணயம் குறித்து தீர்க்கமான வடிவமைப்பைச் செய்து தொகுதிகளை உறுதி செய்த பின்னரே கலப்பு தேர்தல் முறைமையை ஏற்றுக்கொள்வதா இல்லையா எனும் தீர்மானத்துக்கு வரமுடியும்.
இதுதவிர இளைஞர்கள், பெண்களுக்கு வாய்ப்பு, பிரச்சார நிதி, தேர்தல் கால ஊடகப்பாவனை, அங்கவீனர்களுக்கான வாய்ப்பு, தேர்தல் தினத்துக்கு முன் கூட்டிய வாக்களிப்பு ஏற்பாடுகள் முதலான நல்ல பல விடயங்கள் இந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதை மறுக்க முடியாது.
அதனை ஏற்றுக் கொள்ளும் அதே வேளை பிரதான விடயமான தேர்தல் முறைமை குறித்த தெளிவற்ற தன்னிச்சையான தீர்மானத்தை மறுதலிக்கவும் வேண்டியுள்ளது. தேர்தல் முறைமை மறுசீரமைப்புக்கு போலவே எல்லை மீள்நிர்ணயத்துக்காகவும் பாராளுமன்றத் தெரிவுக்குழு அமைத்து கலந்துரையாடி முடிவுகள் எட்டப்படல் வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இந்தக் கலந்துரையாடல் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும, தயாசிரி ஜயசேகர, ரஞ்சித் மத்தும பண்டார, மனோ கணேசன், ஹர்ஷ டி சில்வா, ரொஷான் சி தொலவத்த ஆகியோரும் அரசியல் கட்சி செயலாளர்கள் பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.