மசகு எண்ணெய் கப்பல் விரைவில் நாட்டுக்கு வருவதையடுத்து எதிர்வரும் 19ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக மண்ணெண்ணெய் விநியோகம் நடைபெறுமென மின்சக்தி எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மசகு எண்ணெய்யுடன் கப்பல் எதிர்வரும் 13 ஆம் திகதி நாட்டை வந்தடைந்ததும் 15 ஆம் திகதி முதல் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகுமென சபையில் தெரிவித்த அமைச்சர், எதிர்வரும் ஆகஸ்ட் 19ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக மண்ணெண்ணெய் விநியோகம் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டதால் கடற்றொழிலாளர்கள் மற்றும் கைத்தொழில் துறையில் குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
எனினும் கடந்த வாரங்களில் புத்தளம்,தங்காலை,கிரிந்திவெல ஆகிய பகுதிகளில் கடற்றொழிலாளர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்டுள்ளது என்றார்