பொருளாதார நெருக்கடிகளின் காரணமாக நாட்டில் சுமார் 40000 பேர் உணவைப் பெற்றுக் கொள்ள முடியாமல், போஷாக்கின்மையால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அது மாத்திரமின்றி விபச்சாரமும் 30 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
பாண், கோழி, உரம், மண்ணெண்ணெய், அரிசி மற்றும் சீனி உள்ளிட்ட மேலும் பல பொருட்களை கொள்வனவு செய்வதற்கான செலவு நல்லாட்சி அரசாங்கத்தின் போது 34028 ரூபாவாகக் காணப்பட்டது.
ஆனால் இன்று அந்த செலவு ஒரு இலட்சத்து 53309 ரூபாவாக உயர்வடைந்துள்ளது. அதாவது பொருட்களின் விலைகள் நூற்றுக்கு 650 சதவீதத்தினால் உயர்வடைந்துள்ளன.
உலக வங்கியின் தரப்படுத்தலில் உணவு பண வீக்கம் அதிகமாகவுள்ள நாடுகள் பட்டியலில் இலங்கை 5 ஆவது இடத்திலுள்ளது. ஜூன் மாதம் 58 சதவீதமாகக் காணப்பட்ட உணவு பண வீக்கம், ஜூலையில் 66 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.
இந்த நிலைமையினால் ஒரு வேளை உணவைக் கூட உட்கொள்ள முடியாத 40000 பேர் உடல் நலக்குறைவினால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.