மக்கள் எதிர்ப்பு அலையால் நாட்டைவிட்டு ஓடிய இலங்கையின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பினார். நேற்றிரவு 11.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்த கோட்டாபய, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் கொழும்பு – 07 இல் உள்ள வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
கோட்டாவின் வருகையை முன்னிட்டு கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாட்டில் மக்கள் போராட்டம் வெடித்த நிலையில் ஜுலை 09 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகை முற்றுகையிடப்பட்டு, அதனை போராட்டக்காரர்கள் கைப்பற்றினர்.
இதனையடுத்து பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த கோட்டாபய ராஜபக்ச, ஜுலை 13 ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேறினார்.
மாலைதீவு சென்றடைந்த அவர், அங்கு ஒரு நாள் தங்கிய பின்னர் சிங்கப்பூர் சென்றார். சிங்கப்பூரில் இருந்து ஜுலை 14 இல் பதவி விலகல் கடிதத்தை அனுப்பினார். சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்து சென்ற அவர், அங்கிருந்தே நேற்றிரவு நாடு திரும்பினார்.