Go home gota அனைத்து கட்சி போராளிகள் குழு – மனோ எம்.பி சந்திப்பு

0
333

“தம்பி, இந்நாட்டில் ஜனாதிபதியாக. பிரதமராக நாம் துடிதுடிக்கவில்லை. அப்படி துடியாய் துடிக்கும் பெருங்கட்சிகளை ஒரு கூடையில் போடுங்கள். எம்மை போன்ற ஒடுக்கப்பட்ட மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் முற்போக்கு கட்சிகளை வேறு விதமாக பாருங்கள். இந்நாட்டில் ஜனாதிபதியாக. பிரதமராக எமக்கு தகுதி இல்லாமல் இல்லை. அவை நிச்சயமாக எமக்கு இருக்கின்றன. ஆனால், நாம் பேரினவாதத்தால் ஒடுக்கப்பட்டுள்ள எமது மக்களை விடுவிக்கவே இன்று துடிக்கிறோம்.” என தமிழ் முற்போக்கு கூட்டணியை சந்தித்த  போராட்டக்கள அனைத்து கட்சி போராளிகள் குழுவிடம் மனோ கணேசன் எம்பி தெரிவித்தார்.

தமிழ் முற்போக்கு கூட்டணி- அனைத்து கட்சி போராளிகள் குழு சந்திப்பு,இன்று கூட்டணி தலைவர் மனோ கணேசன் இல்லத்தில் நிகழ்ந்தது. தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவர் பழனி திகாம்பரமும் இச்சந்திப்பில் கலந்துக்கொண்டார். இதுபற்றி மனோ எம்பி மேலும் கூறியதாவது,

தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும், காலிமுகதிடல், “அனைத்து கட்சி போராளிகள்” (அகபோ) தூதுக்குழுவினக்கும் இடையில் எனது இல்லத்தில் நிகழ்ந்தது. இந்த சந்திப்பில் திகாம்பரம் எம்பியும் கலந்துக்கொண்டார். அனைத்து கட்சி போராளிகள்” (அகபோ) சார்பில், விபீதக பொத்துவகே, நிராஷான் விதானகே, மனிஷ் கலப்பத்தி, கெலும் அமரதுங்க ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

இன்றைய அரசியல் நிலைமைகள் தொடர்பில் நடைபெற்ற பேச்சுகளின் போது, தொடர்ந்து தமுகூ-அகபோ இடையில் பரஸ்பர தொடர்புகளை பேணி செயற்படுவது என்று முடிவானது. மலையக மக்கள், இலங்கை தேசிய தளத்தில் உள்வாங்கப்படுவது தொடர்பான, தமுகூ யின் மலையக அபிலாஷை ஆவணமும் அனைத்து கட்சி போராளிகளுக்கு வழங்கப்பட்டது.

இவர்களிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் நான் எடுத்து கூறியது, “தம்பி, நாட்டில் ஜனாதிபதி, பிரதமர் ஆக வேண்டும் என துடியாய் துடிக்கும் பெருங்கட்சிகளை ஒரு கூடையில் போடுங்கள். எம்மை போன்ற ஒடுக்கப்பட்ட மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் முற்போக்கு கட்சிகளை வேறு விதமாக பாருங்கள்”

“தமிழர்களாகிய எங்களுக்கு இந்த உணவு இல்லை, மின்சாரம் இல்லை,.. என்பவை பழகிப்போன பிரச்சினைகள். போர் காலத்தில் பல்லாண்டுகளாக தமிழ் மக்கள் இப்படி வாழ்ந்தார்கள். மலை நாட்டில் போர் இல்லாமலேயே நம் மக்கள் தோட்ட சிறைகளுக்குள் இப்படிதான் வாழ்கிறார்கள்.”

“கலவர காலங்களில் எங்கள் வீடுகள் எரிக்கப்பட்டன. எம் மக்கள் கொல்லப்பட்டார்கள். ஆகவே இவை எமக்கு சகஜம். ஆகவே புதிய இலங்கையை உருவாக்குவோம். இவை அனைத்திற்கும் தீர்வு தேடுவோம். மாற்றத்தை கொண்டு வர சொல்லிவிட்டு, நீங்கள் ஓரமாய் ஒதுங்கி நிற்காதீர்கள். அந்த தேடலில் நீங்களும் நேரடியாக பங்களியுங்கள். அந்த தீர்வு உணவு, மின்சாரம், எரிவாயு ஆகியவற்றுக்கு அப்பால் இருக்க வேண்டும்.”

“மலையக தமிழ் மக்களில் மூன்றில் ஒரு பகுதியினர் தோட்டங்களில் பின்தங்கி வாழ்கின்றனர். அவர்களை தேசிய தளத்தில் உள்வாங்க அரசு இயந்திரத்தில் பெரும் தயக்கம் காணப்படுகிறது. அதை நாம் முறியடிப்போம். நீங்களும் உதவ வேண்டும்.”

இவற்றுக்கு, அனைத்து கட்சி போராளிகள் (அகபோ) சார்பில் பதிலளித்த பேச்சாளர் கெலும் அமரதுங்க கூறியதாவது, “நாம் உங்களை தேடி வந்து சந்தித்தமைக்கு காரணம் உண்டு. ஏனைய தமிழ், முஸ்லிம் கட்சிகளையும், ஜனநாயக கட்சிகளையும் நாம் சந்திக்கிறோம். இன்று விலகி போக இருந்த கோதாபய ராஜபக்ச, ரணில் விகிரமசிங்கவின் உள்நுழைவால் கொஞ்சம் மூச்சு வாங்குகிறார். நாம் எதிர்பார்க்கும் மாற்றம் நீங்கள் கூறுவது போன்று,  உணவு, மின்சாரம் ஆகியவற்றுக்கு அப்பால் ஆனது. அதில் நாம் இந்நாட்டின் அனைத்து இன, மத மக்களுடன் பயணிக்க விரும்புகிறோம். நாம் பலரை சந்தித்தோம். மாற்றத்துக்காக எம்மை நேரடியாக பங்களிக்கும்படி இதுவரை யாரும் கூறவில்லை. நீங்கள்தான் திறந்த மனதுடன் அதை கூறுகிறீர்கள். உங்களுடன் தொடர்புகளை பேண விரும்புகிறோம். மலையக தமிழ் மக்களையும் நாம் சரிசமமாக கவனத்தில் எடுப்போம்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here