இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை வெற்றிகொண்டு, வளமான தேசத்தை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என பிரித்தானியா வாழ் இலங்கையர்களிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச்சடங்குகளில் கலந்துகொள்ள பிரித்தானியா சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அங்குள்ள புலம்பெயர் இலங்கையர்களை
சந்தித்து கலந்துரையாடியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தினூடாக இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பிரித்தானியா வாழ் இலங்கை வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள், தொழில் வல்லுநர்கள் உள்ளிட்ட பலரும் ஜனாதிபதியுடனான சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.
புலம்பெயர் அலுவலகப் பணிகள் உள்ளிட்ட இலங்கையிலுள்ள புதிய முதலீட்டு வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளுமாறு இதன்போது புலம்பெயர் இலங்கையர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
வடக்கில் காணப்படும் காணிப் பிரச்சினை, காணாமல் போனவர்கள் தொடர்பான பிரச்சினை ஆகியவற்றுக்கு தீர்வு காண வேண்டும் எனவும், அதிகார பகிர்வின் சில அடிப்படைகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் இதன்போது ஜனாதிபதி கூறியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து இதன்போது விளக்கமளித்த ஜனாதிபதி, இலங்கையிலுள்ள புதிய முதலீட்டு வாய்ப்புகளில் இணைந்துகொள்ளுமாறு பிரித்தானியா வாழ் இலங்கையர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பிரித்தானியாவின் புதிய மன்னரின் தலைமையில் பொதுநலவாய நாடு என்ற வகையில், எதிர்கால சவால்களை இலங்கை வெற்றிகொள்ளும் என ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நாட்டின் கடனை அடைப்பதற்கு 25 ஆண்டுகள் தேவைப்படும் எனவும், அதற்கமைய நாடு சுதந்திரம் பெற்று நூறாவது வருடமான 2048 வரை கடனை செலுத்த வேண்டி ஏற்படும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.