ஆர்ப்பாட்டங்களை நடாத்த ஆறு மணித்தியாலங்களுக்கு முன்னர் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஆர்ப்பாட்டங்களை நடத்துவதாயின் குறைந்தபட்சம் 6 மணித்தியாலங்களுக்கு முன்னர் பொலிஸாருக்கு அறிவித்தல் வழங்கி அனுமதி பெற வேண்டும்.
அமைதியான போராட்டங்களுக்கு எந்தவொரு தடையும் இல்லை. தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலேயே உயர் பாதுகாப்பு வலயங்கள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் ஸ்திரமான சூழல் உருவாகி வருகின்ற நிலையில் போராட்டங்களை நடத்தி மக்களுக்கு இடையூறு விளைவித்தால் பொலிஸார் சட்டத்தை அமுல்படுத்துவார்கள் என பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன இதன் போது தெரிவித்தார்.
அத்துடன், தேவையேற்பட்டால் நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸாருக்கு உதவ பாதுகாப்புப் படைகளும் தயாராக இருப்பதாகவும் பாதுகாப்புச் செயலாளர் இதன்போது தெரிவித்தார்
இதன்போது மேலும் தெரிவித்த அவர், ஆர்ப்பாட்டம் நடாத்தலாம், உங்கள் எதிர்ப்பை தெரிவிக்கலாம், கூட்டங்களை நடத்தலாம். ஆனால், சட்ட முறைப்படி அந்த கூட்டங்களுக்கு முன் அனுமதி பெற வேண்டும்.
கிராமத்தில் கூட ஒலிபெருக்கிகளை பயன்படுத்த அந்தந்த பொலிஸ் நிலையங்களில் எழுத்து மூல அனுமதி பெற வேண்டும். அவ்வாறில்லாவிடின், திடீர் ஆர்ப்பாட்ட ங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமை பொலிஸாருக்கு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.