கல்வி அமைச்சு மற்றும் மாகாணக் கல்வி அமைச்சுக்களால் மட்டும் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலை வசதிக் கட்டணங்களைத் தவிர சிறுவர் தினம், ஆசிரியர் தினம் உள்ளிட்ட பல்வேறுபட்ட நிகழ்வுகளுக்கு மாணவ, மாணவிகளிடமோ அல்லது பெற்றோரிடமோ பணம் அறவிடக் கூடாதென கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளில் முறையற்ற விதத்தில் பணம் அறவிடப்படுவதைத் தடுக்கும் வகையில் 2015/05என்ற சுற்றறிக்கை வெளியிடப்பட் டுள்ளதை வலியுறுத்திய கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க , கடுமையான நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் பெற்றோர் தமது பிள்ளைகளின் கல்விக்காகப் போராடிக் கொண்டிருக்கும் இவ்வாறான சந்தர்ப்பத்தில் இவ்வாறு பணத்தைச் செலவழிக்கும் செயற்பாடுகளை நிறுத்துவது அதிபர்களின் பொறுப்பெனவும் அவர் தெரிவித்தாhர்.
பாடசாலையில் மாணவர்களிடம் அவசியமற்ற முறையில் பணம் கேட்பார்களாயின் அது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்க வேண்டியது பெற்றோரின் பொறுப்பெனவும் செயலாளர் வலியுறுத்தினார். கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
பாடசாலைக்கு சட்ட ரீதியாக செலுத்த வேண்டிய வசதிக்கட்டணத்தைக் கூட உடனடியாக செலுத்துமாறு மாணவ, மாணவியரிடமோ அல்லது பெற்றோரிடமோ அழுத்தத்தை பிரயோகிக்க கூடாது. பெற்றோரால் அந்தத் தொகையைச் செலுத்த முடியாத பட்சத்தில் கிராம சேவகரின் சான்றிதழை சமர்ப்பித்து அதனை செலுத்துவதைத் தவிர்க்க முடியுமெனவும் கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க சுட்டிக்காட்டினார்.
ஹற்றன், கொட்டகலை போகஹவத்த பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் ஆசிரியர் பாராட்டு விழாவொன்றை நடத்துவதற்காக 300ரூபாவை வழங்காத காரணத்தினால் பாடசாலை மாணவியை அதிபர் தும்புத்தடியால் அடித்த சம்பவம் தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பில் ஹற்றன் கல்வி வலயம் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.