காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத் தளத்திற்கு பூட்டு

0
227

காலி முகத்திடலை நோக்கி முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டப் பேரணியை தடுக்கும் வகையில், ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. காலி முகத்திடலில் சட்டத்தரணிகள் மற்றும் தொழில் வல்லுநர்கள் முன்னெடுக்கும் குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை தடுக்கும் உத்தரவை வழங்குமாறு, கோட்டை பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கோட்டை நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இன்று கொழும்பு, கோட்டை நீதவான் திலிண கமகே இவ்வாறு குறித்த கோரிக்கையை நிராகரித்திருந்தார்.

இதன்போது, அமைதியான முறையில் ஒன்றுகூடுவது அடிப்படை உரிமை என, சட்டத்தரணிகள் மற்றும் தொழில்கள் உரிமை இயக்கம் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதற்கு முன்னரும் பல அரசியல் கட்சிகள் காலி முகத்திடலில் போராட்டங்களை நடத்தியதாக அவர் இதன்போது நீதிமன்றிற்கு சுட்டிக்காட்டினார்.

குறித்த சமர்ப்பிப்புகளை பரிசீலித்த கோட்டை நீதவான் திலிண கமகே, ஆர்ப்பாட்டத்தின்போது சட்டவிரோதமான அல்லது வன்முறையான விடயங்கள் எதுவும் இடம்பெறும் என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பதை தெரிவித்தார்.

அதற்கமைய, ஏனையோரின் உரிமைகளுக்கு இடையூறு விளைவிக்காத வகையில் எந்தவொரு போராட்டத்தையும் முன்னெடுப்பதற்கு தடையில்லை என்று குறிப்பிட்ட நீதவான், வன்முறைச் செயல்கள் இடம்பெற்றால், அவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கு பொலிஸாருக்கு அதிகாரம் இருப்பதாகவும் இதன்போது குறிப்பிட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here