தமிழ் முற்போக்கு கூட்டணிக்குள் கருத்து முரண்பாடு ஏற்படும் வகையில் கருத்துக்களை பதிவிடும் அல்லது முன்வைக்கும் யாராக இருந்தாலும் பதவி நிலை என்பன கருத்தில் கொள்ளாது உடனடியாக கட்சியிலிருந்து நீக்கப்படுவர் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித்தலைவரும் தொழிலாளர் தேசிய. சங்கத்தின் தலைவருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
அவரது முகநூல் பக்கத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது..
“மலையகத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி உருவாக்கபட்ட பின்னர் அது தேர்தல் கூட்டணி எனவும் செல்லா கூட்டம் எனவும் பலர் விமர்சித்தனர். இருப்பினும் பல்வேறுபட்ட விமர்சனங்களை தாண்டி தமிழ் முற்போக்கு கூட்டணி இன்று ஏழு வருடங்களை கடந்ததோடு மட்டுமல்லாமல் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே இலங்கையில் ஏனைய அரசியல் கூட்டணிகளுக்கு முன்னுதாரணமாக தமிழ் முற்போக்கு கூட்டணி விளங்குகிறது.
தமிழ் முற்போக்கு கூட்டணி மலையகத்தில் தோற்றம் பெற்றதன் பின்னரே உட்கட்டமைப்பு மட்டுமல்லாது உரிமை சார்ந்த அபிவிருத்தி பணிகளும் முன்னெடுக்கப்பட்டன. காலம் காலமாக அதிகரிக்கப்படாதிருந்த இரண்டு பிரதேச சபைகளை ஆறாக அதிகரித்தது.
மலையகப் பெருந்தோட்ட மக்களுக்கு என அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பதற்கு அரச நிறுவனம் ஒன்று இல்லாத நிலையில் மலைநாட்டு புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை உருவாக்கப்பட்டது.
இதுவரை காலமும் காணி உரிமை இல்லாதிருந்த எமது மக்களுக்கு உண்மையான காணி உரித்தினை பெற்றுக் கொடுத்த பெருமை தமிழ் முற்போக்கு கூட்டணியை சாரும்.
பிரதேச சபைகள் மட்டுமல்லாது பிரதேச செயலகங்களையும் அதிகரிப்பதற்கு நாம் வைத்த கோரிக்கையின் அடிப்படையிலேயே வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது.
எத்தனையோ அரசியல் கட்சிகள் கூட்டணிகள் இருந்திருந்தாலும் தமிழ் முற்போக்கு கூட்டணி காலத்திலேயே மலையகத்தில் ஏழு பேர்ச் சொந்த நிலத்தில் தனி வீடு திட்டம் முழு வீச்சோடு முன்னெடுக்கப்பட்டது.
இத்தகைய விடயங்களை தனித்து அல்லாமல் கூட்டணியாக வெற்றி கொண்டுள்ளோம்.
தலைவர் மனோ கணேசன் அவர்களும் பிரதி தலைவர்கள் ஆகிய நானும் ராதாகிருஷ்ணன் அவர்களும் கூட்டணி மீது நம்பிக்கை வைத்துள்ளோம். இந்த கூட்டணியின் முக்கியத்துவம் எங்களுக்கு நன்றாகவே புரியும் தனித்தனியாக நின்று செயல்பட்டிருந்தால் இத்தகைய வரலாற்று அபிவிருத்திகள் எட்டாக் கனியாகியிருக்கும்.
எனவே தமிழ் முற்போக்கு கூட்டணிக்குள் கருத்து முரண்பாடு ஏற்படும் வகையில் கருத்துக்களை பதிவிடும் அல்லது முன்வைக்கும் யாராக இருந்தாலும் பதவி நிலை என்பன கருத்தில் கொள்ளாது உடனடியாக கட்சியிலிருந்து நீக்கப்படுவர் என்பதையும் அறிய தருகின்றேன். ” என குறிப்பிட்டுள்ளார்.
பழனி திகாம்பரம் – பா.உ
தலைவர் – தொ.தே.ச, தொ.தே.மு
பிரதித் தலைவர் – த.மு.கூ