நுவரெலியா மாவட்டத்துக்கு ஆங்கில பாடசாலை-சஜித் பிரேமதாச தலைமையிலான ஆட்சியில் நிச்சயம் செய்வோம்

0
214

மலையகத்தில் ஒரு காலகட்டத்தில் அடாவடி அரசியலே இடம்பெற்று வந்தது. அந்த யுகம் தற்போது முடிந்து விட்டது. மக்கள் நலன்சார் விடயங்களுக்காக இணைந்து செயற்படுவதற்கு நாமும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் பொது இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளோம்.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் “பிரபஞ்சம்” எனும் திட்டத்தின் கீழ் கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் அமைந்துள்ள கேம்பிரிட்ஜ் கல்லூரிக்கு இன்று காலை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பாடசாலை பஸ் ஒன்றினை வழங்கி வைத்துள்ளார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்த பஸ் கையளிக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நுவரெலியா மாவட்டத்தில் பாடசாலைகளில் நடைபெறும் நிகழ்வுகளில் கடந்த காலங்களில் நான் பங்கேற்கவில்லை. ஏனெனில் நான் கலந்துகொண்டால் சம்பந்தப்பட்ட பாடசாலையின் அதிபருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டு வந்தது. மாணவர்களின் நலனை கருதி நானும் அமைதியாக இருந்தேன். ஒரு சில பாடசாலைகளுக்கு மட்டும் செல்வதுண்டு.

இப்படியான அடாவடி அரசியல் கலாச்சாரமே இங்கு இருந்தது. ஆனால் தற்போது அந்நிலைமை இல்லை. நாடாளுமன்றத்தில் வைத்து நாங்களும், ஜீவனும் பேச்சு நடத்தினோம். அவர்களின் அரசியலை அவர்கள் முன்னெடுப்பதற்கும், எங்கள் வழியில் நாங்கள் பயணிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. மக்கள் நலன்சார் விடயங்களின் போது இணைந்து செயற்படவும் இணக்கத்துக்கு வந்துள்ளோம்.

மலையக பெருந்தோட்ட மக்கள் தொடர்ந்து கூலித்தொழிலாளியாக இருக்க முடியாது. அவர்கள் சிறுதோட்ட உரிமையாளர்களாக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கை எமது ஆட்சியில் நிச்சயம் முன்னெடுக்கப்படும்.

நுவரெலியா மாவட்டத்துக்கு ஆங்கில பாடசாலையொன்று அவசியம். அதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கையை நல்லாட்சியின் போது எடுத்திருந்தோம். ஆனால் கைக்கூடவில்லை . சஜித் பிரேமதாச தலைமையிலான ஆட்சியில் நிச்சயம் செய்வோம். ” – என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here