” மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்குவதற்கு ஆயிரம் நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. இது அடிமைத்தனத்தின் வெளிப்படாகும். இதற்கு முற்றுபுள்ளி வைத்து, பெருந்தோட்டத் தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவோம். மலையக மக்களின் எதிர்காலத்தை நான் பொறுப்பேற்பேன்.”
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையக திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலுயே சஜித் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளராக்குவேன் என நான் கூறியபோது, அதற்கு எதிராக இனவாத பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. அவ்வாறானவர்களுக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டினர். இந்நாட்டில் இனவாதம், மதவாதத்துக்கு இடமளிக்ககூடாது. நாம் அனைவரும் இலங்கையர்களாக பயணிக்க வேண்டும்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வழங்குவதற்கு ஆயிரம் நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. இத்தனை கிலோ கொழுந்து பறிக்க வேண்டும், அதிகளவு நேரம் வேலை செய்ய வேண்டும் என்றெல்லாம் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இது அடிமைத்தனமாகும். இந்த அடிமைத்தனத்துக்கு முடிவு கட்ட வேண்டும். அதற்காக ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் தோட்டத் தொழிலாளர்கள் சிறுதோட்ட உரிமையாளர்களாக்கப்படுவார்கள்.
சிலர் தோட்டத் தொழிலாளர்களை அப்படியே வைத்திருக்கவே முற்படுகின்றனர். அதற்கு நாம் இடமளிக்கமாட்டோம். மலையகத்தில் கல்வி, சுகாதாரம் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும். வீடுகளும் நிர்மாணிக்கப்படும். எமது ஆட்சிக்கு பிறகு அடுத்த அரசுக்கு அதற்கான பணிகளை மிச்சம் வைக்கமாட்டோம். மலையக மக்களின் எதிர்காலத்தை நான் பொறுப்பேற்பேன்.” – என்றார்.
( க.கிஷாந்தன்)