Breaking news-அமைச்சர் ஜீவனுடன், சகாக்களும் நுவரெலியா நீதிமன்றில் ஆஜர் செய்ய பதில் நீதவான் உத்தரவு

0
353
களனி வெளி பெருந்தோட்ட முகாமைத்துவ கம்பனிக்கு உட்பட்ட நுவரெலியா  பீட்றூ தோட்ட தேயிலை தொழிற்சாலைக்குள் அத்துமீறி நுழைந்து தொழில் நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்ததாக  இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் உட்பட மேலும் பலரை கைது செய்து  (26.08.2024) திங்கட்கிழமை நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை நுவரெலியா நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ஜயமினி அம்பகஹவத்த (22.07.2024) திங்கட்கிழமை பிறப்பித்தார்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
 கடந்த மே மாதம் 30 ஆம் திகதி மாலை உடரதல்ல தோட்ட தொழிலாளர்களுக்கு களனி வெளி பெருந்தோட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும்  உடரதல்ல தோட்ட நிர்வாகம்  தொழிலாளர்களுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பில் நுவரெலியா மாவட்ட தொழில் திணைக்களத்தில் இரு தரப்புகளும் இடையில் இடம்பெற்ற  பேச்சுவார்த்தைக்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் நுவரெலியாவுக்கு வருகை தந்திருந்தார்.
அதேநேரத்தில் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இயங்கும் மாவட்ட உதவி தொழில் ஆணையாளர் தலைமையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி முடிவுற்றது.
இதைத் தொடர்ந்து அமைச்சர் ஜீவன் தொண்டமான் உடரதல்ல தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினை தொடர்பில் களனிவெளி பெருந்தோட்ட கம்பனிக்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்து அன்றைய தினம் மாலை பீட்று தோட்ட தொழிற்சாலையில் இருந்த தோட்ட அதிகாரிகளை சந்திக்க உள்ளதாக தெரிவித்து தனது ஆதரவாளர்களுடன் சென்றிருந்தார்.
இதன்போது தோட்ட தொழிற்சாலைக்குள் அத்துமீறி தொழில் நடவடிக்கைக்கு பாதகம் விளைவித்தார் என
அமைச்சர் ஜீவன் தொண்டமான் உட்பட அவரது சகாக்களுக்கு எதிராக களனி வெளி பெருந்தோட்ட நிறுவனத்தால் நுவரெலியா போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து பின் அமைச்சரை விசாரணைக்கும் வரவழைக்கப்பட்டிருந்தது.
அதேநேரம் பொலிஸ் விசாரணைக்கு வருகை தந்திருந்த போது சமரசமாக பேசி
பின் பீட்று தோட்ட நிர்வாகம்  இந்த முறைப்பாட்டை வாபஸ் பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 இருந்தபோதிலும் தோட்ட நிர்வாகத்தினால் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்டிருந்த முறைப்பாடு வாபஸ் பெறப்படாமல் காணப்பட்ட நிலையில் பொலிஸார் நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இவ்வாறு தொடரப்பட்ட வழக்கே இன்று (22) காலை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது வழக்கு விசாரணையை எடுத்து கொண்ட பதில் நீதவான்  ஜயமினி அம்பகஹவத்த விசாரணைக்கு எதிர் தரப்பினர் மன்றுக்கு சமூகமளிக்காத பட்சத்தில் பிரதிவாதிகளான சந்தேக நபர்களை கைது செய்து ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி நீதிமன்றத்தில் முன்னிலையாக்கும் படி பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்தார்.
குறித்த வழக்கு தொடர்பாக களனி வெளி பெருந்தோட்ட நிறுவனத்திற்கு சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தேகொட  மற்றும் வழக்கறிஞர் பாலித சுபசிங்க மற்றும் வழக்கறிஞர் சுரேஷ் கயான் ஆகிய மூன்று வழக்கறிஞர்களும் மன்றில் முன்னிலையாகி இருந்தனர்.
இவ்வழக்கின் பிரதான சந்தேக நபரான அமைச்சர் ஜீவன் தொண்டமான் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ஆ.ரமேஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here