அடக்குமுறைகளை தற்போது சிங்கள மக்களும் உணர்கின்றனர் – சாணக்கியன் எம்.பி.

0
317

போராட்டத்தில் ஈடுப்பட்ட இளைஞர்கள் தற்போது கைது செய்யப்படுகிறார்கள். சிறந்த மாற்றத்திற்கான போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களையும், போராட்டத்தில் ஈடுபடுபவர்களையும் கைது செய்வதை விடுத்து. மத்திய வங்கியினை கொள்கைய டித்தவர்கள், சீனி வரி ஊடாக கொள்ளையடித்தவர்கள், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டிற்கும், பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கும் தீ வைத்தவர்களை கைது செய்ய அவதானம் செலுத்துங்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

அவசரகால சட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘இலங்கை அரசியல் வரலாற்றில் தவறுகளை திருத்திக் கொள்ள அரசியல் தலைவர்களுக்கு பல சந்தர்ப்பம் கிடைத்த போதும் அவர்கள் அவற்றை முறையாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு அதுவும் ஒரு காரணியாக காணப்படுகிறது.

தற்போதைய அரச தலைவர்கள் வரலாற்று ரீதியிலான தவறை திருத்திக்கொண்டு பொருளாதார முன்னேற்றம் குறித்து அவதானம் செலுத்த வேண்டும்.
தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுத்தால் பொருளாதார நெருக்கடிக்கு ஒருமித்த வகையில் தீர்வு காண முடியும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விசேட பொருளாதார வலயங்களை ஸ்தாபித்தால் புலம்பெயர் அமைப்புக்களின் முதலீடுகளை சிறந்த முறையில் எம்மால் பெற்றுக்கொள்ள முடியும். அதற்கு அடிப்படை பிரச்சினைகளுக்கு முறையான தீர்வு அவசியம்.

காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு, உட்பட அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து அரச தலைவர்கள் விசேட அவதானம் செலுத்த வேண்டும்.
அவசரகால சட்டம், கைது, ஆகியவை தமிழ் மக்களுக்கு ஒன்றும் புதியதல்ல, போராட்டத்தில் ஈடுபடுபவர்களை சட்டத்தின் ஊடாக அடக்குவதை விடுத்து அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here