அட்டன் சமூர்த்தி வங்கிக்கு எதிராக ஜனாதிபதி செயலகத்திற்கு முறைப்பாடு : உறுப்பினர் ராம்

0
664
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், சமூர்த்தி கொடுப்பனவே ஓரளவு ஆறுதல் நிவாரணமாக இருந்து வருகின்றது.
இந்நிலையில் அந்த கொடுப்பனவையும் வழங்காமல் இழுத்தடிப்பது பெரும் அநீதியாகும். இது தொடர்பில் ஜனாதிபதி செயலகம் உட்பட உரிய தரப்புகளுக்கு முறைப்பாடுகள் அனுப்பிவைக்கப்படும்.” – என்று நோர்வூட் பிரதேச சபையின் தொழிலாளர் தேசிய முன்னணியின் உறுப்பினரான மு. இராமசந்திரன் (ராம்) தெரிவித்தார்.
ஹட்டன் சமூர்த்தி வங்கிக்குட்பட்ட லெதண்டி 319 K கிராம சேவகர் பிரிவில் 210 சமூர்த்தி பயனாளிகள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெருந்தோட்டப்பகுதிகளில் வாழ்பவர்கள்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்தில் ஏனைய சமூர்த்தி வங்கிகள், சமூர்த்தி பயனாளிகளுக்கு முன்கூட்டியே கொடுப்பனவை வழங்கியுள்ளன. எனினும், லெதண்டி 319 K கிராம சேவகர் பிரிவில் உள்ள பயனாளிகளுக்கு இன்னமும் கொடுப்பனவு வழங்கப்படவில்லை.
கடந்த ஒரு வார காலமாக ஹட்டன் சமூர்த்தி வங்கிக்கு சென்றாலும், கொடுப்பனவு வழங்கப்படவில்லை, ஏமாற்றத்துடனேயே வீடு திரும்புகின்றோம் என சமூர்த்தி பயனாளிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேற்படி வட்டார அரசியல் பிரமுகரான ராமிடம் வினவினோம். இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,
” இது தொடர்பில் மக்கள் என்னிடமும் முறையிட்டுள்ளனர். ஒரு சிலர் கடன் தவணை கட்டணத்தை செலுத்தாததால்தான் கொடுப்பனவு வழங்கப்படவில்லை என ஹட்டன் சமூர்த்தி வங்கி முகாமையாளர் குறிப்பிட்டார் எனவும் கூறினர்.
ஒரு சிலருக்காக ஒட்டுமொத்த மக்களையும் பழிவாங்கும் நடவடிக்கை ஏற்புடையது அல்ல. கடன் தவணையை செலுத்த முடியாவிட்டால்கூட சமூர்த்தி கொடுப்பனவை நிறுத்த முடியாது என்பதே ஏற்பாடாகும். அப்படி இருந்தும் வங்கி முகாமையாளர் மனித நேயமற்ற முறையில் நடந்துகொண்டுள்ளார். வங்கியில் வைப்பில் உள்ள பணத்தைக்கூட மீள பெறுவதற்கு அனுமதி மறுத்துள்ளார் எனவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.
தீபாவளி பண்டிகை தமிழர்களுக்கு முக்கியமானது. கிடைக்கும் சமூர்த்தி பணத்தை வைத்தாவது எதையாவது வாங்குவதற்கு அவர்கள் திட்டமிட்டிருக்கலாம். எனவே, கொடுப்பனவை இழுத்தடிப்பது பெரும் தவறாகும்.
இது தொடர்பில் ஜனாதிபதி செயலகம் உட்பட உரிய தரப்புகளுக்கு அறிவிக்கப்படும். தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரத்தின் கவனத்துக்கும் இந்த விடயத்தை கொண்டுவந்துள்ளேன. ” – என்றார் ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here