அரபு நாடுகளின் தூதுவர்களை சந்திக்கும் முன்னோடி ஏற்பாடுகளில், சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட் நேற்று (15) இலங்கைக்கான சவூதி அரேபிய பதில் தூதுவர் அப்துல்லா எ,எ, ஒர்கோபியை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இருதரப்பு உறவுகளை பலப்படுத்தும் சந்தர்ப்பமாக இப்பேச்சு க்கள் அமைந்திருந்தன.
அமைச்சரின் சிரேஷ்ட ஆலோசகரும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளருமான கருணாசேனா ஹெட்டியாராய்ச்சி மற்றும் சிரேஷ்ட இராஜதந்திரியான ரி,ஷற்,ஏ சம்சுடீன் ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.
அமைச்சில் நடைபெற்ற இச்சந்திப்பில் சுற்றாடல் துறையின் மேம்பாடுகளால் அடையக்கூடிய அதிகளவான நன்மைகளை அடையாளங்காணல் மற்றும் அவற்றை நடைமுறைபடுத்துவதில் இருநாடுகளும் ஒத்துழைத்துச் செயற்படல்
என்பது பற்றி பிரதானமாக கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் இலங்கை எதிர்கொண்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு,சவூதி ஒத்துழைக்க வேண்டியதன் அவசியம் எடுத்துரைக்கப்பட்டது. முறையான எரிபொருள் விநியோகம் இன்னும் இலங்கை ஹஜ்யாத்திரிகர்களுக்கு விஷேட வசதிகளை ஏற்படுத்தல் உள்ளிட்ட விவகாரங்களையும் அமைச்சர் நஸீர் அஹமட் சவூதிஅரேபிய தூதுவரிடம் எடுத்துரைத்தார்.
 சவூதியில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்களின் விடயங்களிலும் இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது.
(ஊடகப்பிரிவு)