அரிசிக்கு நூற்றுக்கு இரண்டரை வீதம் சமூக பாதுகாப்பு வரி செலுத்த வேண்டியுள்ளமையினால் எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஒரு கிலோகிராம்  அரிசியின் விலை  மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாக ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் முதின் பெரேரா தெரிவித்துள்ளார்.

அரிசிக்கு விலையினை அதிகரிக்காது விற்பனை செய்யப்பட வேண்டுமாயின் நெல்லினை குறைந்த விலைக்கு விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்ய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் மக்களுக்கு தேவையான அரிசி கையிருப்பில் காணப்படுகையில் அரசாங்கம் சர்வதேசத்திலிருந்து அரிசியை இறக்குமதி செய்கின்றது. அத்துடன் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள அரிசியில் இரண்டு இலட்சம் மெற்றிக் தொன் அரிசியினை அரசியல்வாதிகளுக்கு நெருக்கமானவர்கள் களஞ்சியப்படுத்தி வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பாரிய அரிசி ஆலை உரிமையாளர்களின் மோசடியும் அதனை எதிர்த்து கேள்வி எழுப்புவதற்கு விவசாய திணைக்கள அதிகாரிகளிடம் காணப்படும் இயலாமையுமே அரிசியின் விலை அதிகரிப்பிற்கு காரணமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வெளிநாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்யப்படுவதனால் 700 இற்கும் அதிகமான சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலைகள் தற்போது மூடப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.