அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர்கள் இலங்கையில் உள்ள சிறுவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு உதவுவதற்காக, 45,000 அவுஸ்திரேலிய டொலர்களை நிதியுதவியாக வழங்கியுள்ளனர். இதனை அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பல தசாப்தங்களுக்கு பின்னர் மிக மோசமான பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு உதவும் வகையிலும், அந்நாட்டு குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு ஆதரளிக்கும் வகையிலும், அவுஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் வீரர்களின் சமீபத்திய இலங்கை சுற்றுப்பயணத்தின் போது கிடைத்த பரிசுத் தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

UNICEF அமைப்பின் அவுஸ்திரேலிய தூதுவராக உள்ள அவுஸ்திரேலிய அணியின் பெட் கம்மின்ஸ் மற்றும் ஆரோன் பிஞ்ச் ஆகியோரின் தலைமையில், அந்த அணி இலங்கைக்கு 45,000 அவுஸ்திரேலிய டொலர்களை நன்கொடையாக வழங்கவுள்ளது.

கடந்த ஜூன் – ஜூலையில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் தங்கள் சுற்றுப்பயணத்தின் போது இலங்கையின் நெருக்கடியை நேரில் அவதானித்திருந்தனர்.

 அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் நன்கொடையாக வழங்கும் நிதியானது பாதிப்புக்குள்ளாகக்கூடிய 1.7 மில்லியன் இலங்கை சிறுவர்களுக்கு போசாக்கு, சுகாதாரம், பாதுகாப்பான குடிநீர், கல்வி, மனநல சேவைகளை ஆதரிப்பதற்காக UNICEF ஸ்தாபனத்தின் திட்டங்களுக்குச் செல்லும்.

இது தொடர்பில் UNICEF அவுஸ்திரேலியா பிரதான நிறைவேற்று அதிகாரி (CEO) டொனி ஸ்டுவர்ட், கடந்த வருடம் கொவிட்-19 டெல்டா அலையின் உச்சக்கட்டத்தின் போது இந்தியாவுக்கு உதவிய அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள், தற்போதைய நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்களுக்கு மீண்டும் தாராளமாக உதவியதற்காக அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.