இலங்கையின்  ஜனாதிபதித் தேர்தல் . வரலாற்றில் முதன் முறையாக ‘பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே’ வாக்களித்து ‘நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை’ தெரிவு செய்து கொள்ளப்  போகும் ஜனாதிபதித் தேர்தல் இன்று நடைபெறுகிறது.

இன்றைய தேர்தலில் மூவர் போட்டியிடுகின்றனர். அதில் அனுரகுமார தெரிவு செய்யப்படுவதற்கான வாய்ப்பு இல்லை. ஆனாலும் போட்டியிடுகின்றார்;  2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டது போலவே.

அடுத்த இருவர் ரணில், டலஸ். இந்த இருவரது வெற்றி வாய்ப்பு குறித்த கருத்துக் கணிப்பு நேற்றைய நாள் முழுவதும் இடம்பெற்றுக் கொண்டு இருக்கிறது.

‘மொட்டு’க் கட்சி என அழைக்கபடும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன விற்கான அடித்தளம் 2012 ஆம் ஆண்டு ‘உள்ளூராட்சி மன்ற எல்லை மீள்நிரணய’ செயற்பாடுகளில் இருந்தே ஆரம்பித்தது. அதன் தந்தை பஷில் ராஜபக்‌ஷ. பண்டாரநாயக்க வை முன்னிலைப்படுத்தும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து ராஜபக்‌ஷவை முன்னிலைப்படுத்தக் கூடிய கட்சியாக அதனை மாற்றுவது என்பது மொட்டுக் கட்சயின் அடிப்படைக் கருத்தியல்.

பண்டாரநாயக்க பரம்பரை – சிறிமா, அனுர, சந்திரிக்கா என வந்து அதற்கடுத்த நிலையில் தொடராத நிலையில் அல்லது சந்திரிக்கா தனது பிள்ளைகளை அரசியலில் இறக்க விருப்பம் கொண்டிருக்காத நிலையில் ‘ராஜபக்‌ஷ’ அரசியல் அடையாளம் ஒன்றை நாட்டில் நிலை நிறுத்துவது என்ற அடிப்படையில் டி.ஏ.ராஜபக்‌ஷவுக்கு சிலை, கொழும்பில் ‘மொட்டு’ சிலை (தாமரைக் கோபுரம்) என செயற்கையாக செய்யப்பட்டக் கட்சி இது.

2012 ஆம் ஆண்டு உள்ளூராட்சி எல்லை மீள்நிரணயத்தை (வட்டார உருவாக்கம்) அதற்கு சாதகமாக வடிவமைத்த கட்சி 2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அமோக வெற்றி யீட்டியது. அது 2019, 2020 ஆம் ஆண்டுகளில்  இடம்பெற்ற முறையே ஜனாதிபதி, பொதுத் தேர்தலில் உச்சம் தொட்டது. இந்த மூன்று  தேர்தல்களுக்கும் பின்னர் நாடு எதிர் கொள்ளும் தேர்தல் ஒன்று இன்றைய ‘பாராளுமன்ற ஜனாதிபதித் தேர்தல்’ என்பதனால்தான் இந்தப் பின்னணி இங்கே கூறப்படுகிறது.

இனி, இன்றைய தேர்தல் குறித்து ….

மேலே கூறிய பின்னணிகளின் பிரகாரம் ,

மொட்டுக் கட்சிக் கொண்டுள்ள பிரிதிநிதித்துவக் கட்டமைப்பை உடைத்து (ராஜபக்‌ஷ சிலையையும் பிம்பத்தையும் நாட்டில் உடைத்து இருந்தாலும்) இன்னுமொருவர் எப்படி வெற்றி பெறுவது என்பதே இன்று எழுந்திருக்கும் வியூக அமைப்புகளாகும்.

அதில், ரணில் மொட்டுக் கட்சியை ‘மொத்தமாகவும்’  சஜித் ‘சில்லறையாகவும்’ வாங்கியுள்ளனர். ஓரே ஒரு ஆசனத்தோடு உள்ளேவந்த ரணில் கையில், அவரைத் தவிர அனைத்துமே ‘மொட்டுகள்’.

இன்றைய திகதியில் டக்ளஸ் தேவானந்தாவின் ‘வீணை’ இரண்டும் அவருக்கு நேரடி ஆதரவை வழங்கி உள்ளன. நேற்றைய இரவில் ‘சில பறவைகள்’ சேர்ந்திருக்க வாய்ப்பு உள்ளது.

தவிரவும் ஒரே தேசிய பட்டியல் ஊடே உள்ளேவந்த ரணில் பிரதமர், தற்காலிக ஜனாதிபதி, பதில் ஜனாதிபதி என தனது இடத்தை வலுப்படுத்திக் கொண்டே ரணில் இன்றைய ‘இடைக்கால ஜனாதிபதி’  தேர்தலில் களம் இறங்குகிறார்.

அவரது கையில் இருக்கும் இன்னுமொரு முக்கிய துரும்பு அவர் கைவசம் இருக்கும் ‘அமைச்சரவை’ யும் அதன் தலைமைப் பொறுப்பும். அவர் வெற்றி பெற்றால் அடுத்து அமைச்சரவையில் புதியவர்களை உள்வாங்கும் ஓர் ஆசையை மொட்டுவின் பின்வரிசைகளுக்கு அவர் நிச்சயம் ஏற்படுத்திக் கொண்டிருப்பார்.

மறுபக்கத்தில் தான் ஜனாதிபதி தேர்தல் களத்தில் இறங்காமலேயே பிரதமர் ஆகிவிடும் கனவில் வியூகம் அமைத்துள்ளார் சஜித். இதற்கு அவர் கையில் எடுத்ததும் ‘மொட்டுகளையே’. சஜித்துடன் இணைந்த மொட்டுகள் அனைத்துமே ‘அண்மையில் அதில் அதிருப்தி கொண்டவை’ என்பதை அவதானிக்க வேண்டும்.

அதில் ஒருவரான டலஸ் இப்போது முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். மகிந்த ராஜபக்‌ஷ பதவி விலகலுக்கு ஓரிரு தினங்களுக்கு முன்பதான மொட்டுக் கட்சி கூட்டத்தில் “டலஸ் முதுகில் குத்துகிறார்” என திஸ்ஸ குட்டி ஆராச்சி எம்பி (பதுளை) நேரடியாகவே குற்றம் சாட்ட, அவருக்கு பதில் அளித்த டலஸ்: ‘நான் எப்போதுமே அணி மாறியவன் இல்லை, எனது கருத்துக்களை நேரடியாக பேசுபவன்” என ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பாய்ந்து மொட்டுவுக்கு வந்த திஸ்ஸ குட்டி தலையில் ஒரு குட்டு வைத்தார்.

அதன்போது மகிந்தவும் “டலஸ் முதுகில் குத்த மாட்டார். அவரை நானே அரசியலுக்குக் கொண்டு வந்தேன்” என டலஸ் பக்கமே நின்றார்.(இதற்கு மறுதலை உண்டு )

டலஸின் அரசியல் வருகை மங்கள ஊடாக நடந்தது என மங்கள சமரவீரவே முன்பு ஒரு முறை கூறி இருந்தார். ஆனாலும் சந்திரிக்கா அரசாங்கத்தில் அங்கம் வகித்த டலஸ் தான் அதில் அதிருப்தி அடைந்துவிட்டதாக கூறி கண்ணீர் மல்க கருத்துக் கூறி அரசியலில் விடைபெற்று 2000 ஆண்டு அமெரிக்காவுக்குச் சென்றிருந்தார். அதன் பின்னர் 2005 ல் மகிந்த தலைமைப் பொறுப்பை ஏற்றதன பின்னர் வந்து இணைந்து கொண்டார். அதனையே மகிந்த தான் அரசியலுக்கு அழைத்து வந்ததாக கூறுவாராக இருக்கும்.

டலஸ்,  அடிப்படையில் ஓர் ஊடகவியலாளர். எளிமையான மனிதர். நல்ல பேச்சாளர். பாராளுமன்ற உறுபிப்பினர்களுக்கு வழங்கப்படும் வாகன அனுமதிப் பத்திர முறைமையை ஆரம்பித்தில் இருந்தே மறுத்து வந்தவர்,மாமிசம்  உண்ணாதவர், மதுப்பழக்கம் அற்றவர் என சில அடையாளப்படுத்தல்களைச் செய்யலாம்.

அவர் மீது வைக்கப்படும் இரண்டு பிரதான குற்றச்சாட்டுகளில் ஒன்று, சந்திரக்காவின் மகன் விமுக்தி விஜேகுமாரதுங்கவுக்குப் பிறந்தவர் இல்லை என செய்தி வெளியிட்டவர் என்பது. ( இந்த முரண் சந்திரிக்கா ஆட்சியில் விலகிச் செல்ல காரணமாக இருக்கலாம்).

இரண்டாவது, பொதுவாக தமிழ் – முஸ்லிம் சமூகத்தில் முன்வைக்கப்படும் ‘சிங்களம் மட்டும் தேசியக் கொடியைக் கையில் ஏந்தினார்’ என்பது. ( அந்த நிழற்படம் இப்போது அதிகமாக பகிரப்படுகிறது).

இந்தப் பின்னணிகளுடன் டலஸ் எப்படி ஜனாதிபதி வேட்பாளர் ஆனார் ? என்பது இங்கே எதிர்பார்க்கப்படும் செய்தி.

மொட்டுவின் அதிருப்தி குழுக்களுக்கு இப்போது இடம் ஒன்று தேவைப்படுகிறது என்பதே இதன் அடிப்படை. மொட்டுக் கூட்டணியிலே இருந்து வெளியேற நேர்ந்த பல குழுக்கள் தனிநபர் கட்சிகளும் பத்துக்கும் குறைவான பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளாகும். எனவே அடுத்த பொதுத்தேர்தலில் இவர்கள் எந்தச் சின்னத்தில் போட்டியிடுவது என்பது எனும் குழப்பத்துக்கு விடை தேடும் போது இப்போதைக்கு அதிருப்தி கொண்டுள்ள முன்னாள் மொட்டுப் பங்காளிகளில் தனிக்கட்சி தலைமையில்லாத (மைத்ரி,விமல்,வாசு,கம்மன்பில, கம்யுனிஸ்ட் கட்சி வரிசை) ஒருவரை அடையாளம் காணும் தேவை இருந்தது. அத்தகைய ஒருவர் என்பதே இப்போதைக்கு டலஸ் அழகப்பெரும கொண்டிருக்கும் தகுதி. இதற்கு ஜி.எல்.பீரிஸ் உம் ஆதரவு அளித்து இப்போது மொட்டு வை மொட்டுகள் ( இளைஞர்கள்) கைகளில் விட்டுவிட்டு மூத்தவர்கள் எல்லாம் எப்படியாவது அடுத்த பொதுத் தேர்தலில் மலர்ந்து  விடுவது என்பதே இப்போதைய உத்தி.

அந்த வியூகத்தில், ஜனாதிபதி பதவியும் கிடைத்து விட்டால் தமது புதிய கூட்டணிக்கு இன்னுமொரு பலமே தவிர இப்போதைக்கு டலஸ் தலைமையில் புதிய கூட்டணி அமைப்பை உறுதி செய்து கொண்டுள்ளார்கள்.

இந்தக் கூட்டணிக்கு கைகொடுத்து உதவி இருக்கிறார்கள் சஜித் அணியினர் என்பதனை இப்போது அவர்கள் உணராமல் இருக்கலாம். ஆனால் அடுத்த பொதுத் தேர்தலில் உணர்வார்கள்.

இந்த பின்ணிகளுடன் ‘பாராளுமன்ற ஜனாதிபதி தேர்தலுக்கு’ முன்பதாக ரணில், டலஸ் தமது அரசியல் வெற்றிகளை இப்போது பெற்றுக் கொண்டுள்ளார்கள் என்றே கருதலாம்.

ஆனால் சஜித் அணி எந்த விடயத்திலும் முன்னகராமல் ‘கழன்ற மொட்டுக்களுடன்’ கைகோர்த்து அவர்களைத் தூக்கிவிடும் பணியையே செய்து இருக்கிறது.

டலஸ் ஜனாதிபதியாகி சஜித் பிரதமர் ஆனாலும்   கூட அடுத்துவரும் இடைக்கால அரசாங்கத்தில் அமைச்சரவையைப் பகிர்ந்து கொள்வதில் பெரும் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். மொட்டுவில் இருந்த விலகிவந்த பலர் தனிக்கட்சி தலைவர் அடையாளத்துடன் அமைச்சுப் பதவியை எதிர்பார்ப்பார்கள். மறுபுறம் ஐக்கிய மக்கள் சக்தியும் தமது உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை எதிர்பார்க்கும் ( குறிப்பாக அதுவும் ஒரு கூட்டணி கட்சி என்பது கவனிக்கத்தக்கது).

எனவே அத்தகைய அனைத்துக் கட்சி அமைச்சரவைத் தலைமையை பிரதம அமைச்சரான சஜித் எவ்வாறு எதிர்கொள்வார். அந்த கதம்ப கூட்டணியை ஜனாதிபதியாக டலஸ் எவ்வாறு சமாளிக்கப் போகிறார் என்பதெல்லாம் கேள்விக் குறிதான். இந்த இருவரது ‘புதிய பொறுப்புகள்’ என்பதை இவர்கள் இருவரும் கற்றுத் தேர்ந்து வருவது என்பது இந்த நெருக்கடி சூழலை மேலும் உக்கிரமடையச் செய்யலாம்.

மறுபுறத்தில் ரணில் தனது நீண்ட அனுபவத்தோடு காய் நகர்த்தல்களைச் செய்து தனது ஜனாதிபதி கவனவை நனவாக்குவதற்கு வாய்ப்புகள் அதிகமே உள்ளது. அவர் அந்தப் பதவிக்கு வந்தால் ஐக்கிய தேசியக் கட்சியை பலமடையச் செய்வார். அது நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் ஒன்று அல்ல. அவ்வாறு ரணில் முயற்சிப்பது இன்றைய சூழலில் கண்டனத்துக்குரியது. அதேநேரம் இப்போது அவரோடு இணையும் மொட்டு அணியை பலவீனமடையச் செய்யும் ஒரு நிகழ்ச்சி நிரலும் இதனூடே அவர் நிகழ்த்துகிறார் என்பது அவதானிக்க வேண்டியது.

ஆக அரசியல் ரீதியாக அடுத்தத் தேர்தலில் ‘மொட்டு’ பலவீனமடையும். அது கடந்த இரண்டாண்டு கால ஆட்சியினாலும், கோட்டா வெளியேற்றம் வரையிலான மக்கள் கொண்ட அதிருப்தி மாத்திரமல்ல இன்றைய ஜனாதிபதித் தேர்தலில் தெளிவாகப் பிரியும் மொட்டுக் கட்சி அதனை உறுதி செய்யும்.

அவ்வாறு உடையும் ‘மொட்டு’ வுடன் கைகோர்த்தே அதற்கு எதிர் கட்சிகளாகக் கருதப்படும் ஐக்கிய தேசிய கட்சி (ரணில்) , ஐக்கிய மக்கள் சக்தி (சஜித்) தமது அடுத்த கட்டத்துக்குச் செல்லவேண்டும் எனும் நிலையே இப்போது முக்கிய  அடையாளப்படுத்தல் ஆகிறது.

ரணில் வந்தால் ராஜபக்‌ஷக்களை காப்பாற்றுவார் என்பதே அவர் மீது வைக்கப்படும் பாரிய விமர்சனமாக உள்ளது. அதே நேரம் டலஸ் ஜனாதிபதியானால் ராஜபக்‌ஷக்களை காப்பாற்ற மாட்டார் என்று என உறுதியாக சொல்ல முடியாது. அதே நேரம் தண்டனை வழங்குவார் என எப்படியும் எதிர்பார்க்கவே முடியாது. எனவே வெற்றிபெறுவார்கள் என எதிர்பார்க்கப்படும் இப்போதைய இருவரில் யார் தெரிவானாலும் ராஜபக்‌ஷவினர் காப்பாற்றப்படுவதில்  அல்லது தண்டிக்கப்படுவதில் புதிதாக ஏதும் நடந்துவிடப் போவதில்லை.

எனவே இலங்கை புதிய இடைக்கால ஜனாதிபதியை தெரிவு செய்து கொள்ளப்போகும் இன்றைய தேர்தலில் வெற்றிப் பெறப்போவது

ராஜபக்ஷக்கள் பாதுகாக்கப்படுகின்ற ‘மொட்டு’ வே ஆகும்; 2019, 2020 தேர்தல்களைப் போலவே.

அதற்கு நேரடியாக ரணிலும் மறைமுகமாக (டலஸ் ஊடாக) சஜித் தும் உதவுகிறார்கள். இதில் ஐக்கிய தேசிய கட்சியை விட ஐக்கிய மக்கள் சக்தி  பலவீனமடையும் வாய்ப்புகளே அதிகம்; டலஸ் வென்றாலும் தோற்றாலும்.

அடுத்த பொதுத் தேர்தலின் பின்னரே மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம் நோக்கிய பயணம் ஆரம்பமாகும். இந்த இரண்டைர வருடங்கள் என்பது ‘மொட்டுவின்’ முட்டுகளாகவே ஆட்சித் தொடரும்.

மல்லியப்பு சந்தி திலகர்