இந்தியாவின் அன்பளிப்பு இன்றும் இலங்கை வந்தடைந்துள்ளது

0
266

இந்திய மக்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட 14,700 மெட்ரிக்தொன் அரிசி, 250 மெட்ரிக்தொன் பால்மா மற்றும் 38 மெட்ரிக்தொன் மருந்துப்பொருட்கள் அடங்கிய பாரிய மனிதாபிமான உதவிப்பொருட் தொகுதியினை, இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே இலங்கையிடம் உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளார்.

இந்த மனிதாபிமான உதவிப்பொருட் தொகுதி 3 பில்லியன் இலங்கை ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடையதாகும். தமிழக அரசினால் வழங்கப்படும் 40,000 மெட்ரிக் தொன் அரிசி, 500 மெட்ரிக்தொன் பால்மா மற்றும் மருந்துப்பொருட்கள் உள்ளடங்கிய பாரிய உறுதிப்பாட்டின் இரண்டாம் கட்டமாக இந்த உதவிப்பொருட் தொகுதி அமைகின்றது.

அதற்கமைய, கடந்த மே 22ஆம் திகதி முதற் கட்டமாக, 9,000 மெட்ரிக் தொன் அரிசி, 50 மெட்ரிக் தொன் பால்மா, 25 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான மருந்துகள் உள்ளிட்ட ஏனைய மருத்துவப் பொருட்கள் இலங்கையை வந்தடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்னொருபோதும் இல்லாத வகையில் இலங்கை மக்களுக்காக இந்தியாவினால் வழங்கப்படும் பொருளாதார, நிதி மற்றும் மனிதாபிமான உதவி 2022 ஆம் ஆண்டில் 3.5 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிக பெறுமதியினை கொண்டுள்ளது.

அந்நியச்செலாவணி ஆதரவான 2 பில்லியன் அமெரிக்க டொலர், மற்றும் மூன்று கடனுதவித்திட்டங்கள் மூலம் 1.5 பில்லியன் அமெரிக்கடொலர் ஆகியவற்றுக்கு மேலதிகமாக இந்திய மக்களாலும் அரசாங்கத்தாலும் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் உள்ள சுகாதாரத்துறை சார்ந்த நிறுவனங்களுக்கு மருந்துகளை வழங்குதல், இலங்கை மீனவர்களுக்கு மண்ணெய் விநியோகம், உதவிகள் தேவைப்படும் மக்களுக்கான உலர் உணவுகளை வழங்குதல் போன்ற உதவிகள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்ணான்டோ, பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், வி. இராதாகிருஷ்ணன், எம் .உதயகுமார், அங்கஜன் இராமநாதன் ஆகியோரும் செந்தில் தொண்டமான் உள்ளிட்டோர் இன்றையதினம் கொழும்பில் துறைமுகத்தில் குறித்த நிவாரண பொருட்கள் அடங்கிய கப்பலை வரவேற்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here