இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் மேன்மைதங்கிய ஸ்ரீ கோபால் பாக்லே 2022 ஒக்டோபர் 1 மற்றும் 2 ஆகிய திகதிகளில் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலைக்கான விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார். இந்த இருநாள் விஜயத்தின்போது, இலங்கையின் கிழக்கு மாகாணத்திற்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஆழமானதும் நிலைபேறானதுமான கலாசார மற்றும் சமூக-பொருளாதார உறவு மற்றும் இந்தியா இலங்கை இடையிலான பல்பரிமாண ஒத்துழைப்புகள் ஆகியவற்றை சுட்டிக்காட்டும் பல்வேறு நிகழ்வுகளில் உயர் ஸ்தானிகர் கலந்துகொண்டார்.

2022 ஒக்டோபர் முதலாம் திகதி நடைபெற்ற கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பிரதம விருதினராக கலந்துகொண்டு மட்டக்களப்பிற்கான விஜயத்தினை உயர் ஸ்தானிகர் ஆரம்பித்திருந்தார். பொருளாதார ரீதியில் ஆதரவு தேவைப்படும் குடும்பங்களைச் சேர்ந்த 100 பல்கலைக்கழக மாணவர்களுக்கு கல்விக்கான ஆதரவை வழங்கும் முகமாக விசேட நிதி உதவி திட்டம் ஒன்று உயர் ஸ்தானிகரால் இந்நிகழ்வின்போது அறிவிக்கப்பட்டிருந்தது. ஐவுநுஊ, புலமைப் பரிசில்கள் உள்ளிட்ட இந்திய அரசாங்கத்தின் பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் உயர் கல்வி மற்றும் திறன்விருத்தி பயிற்சி நெறிகள் மற்றும் நிபுணத்துவமிக்க இந்திய நிறுவனங்களுடனான பங்குடைமையில் மேம்பட்ட ஒத்துழைப்புக்கும் உயர் ஸ்தானிகர் இச்சந்தர்ப்பத்தில் அழைப்பு விடுத்தார்.

மேலும், இந்தியாவின் நன்கொடை உதவித் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுவரும் சத்திரசிகிச்சை அலகின் நிர்மாணப்பணிகளின் முன்னேற்றம் தொடர்பாகவும் உயர் ஸ்தானிகர் மீளாய்வு செய்தார். இந்தியா இலங்கை இடையிலான அபிவிருத்தி ஒத்துழைப்பு பங்குடைமையின் அடிப்படையில் மக்களின் நலன்களை மையப்படுத்திய இத்திட்டமானது நிறைவடையும் காலத்தை எட்டியுள்ளது. இந்தியா இலங்கை இடையிலான அபிவிருத்தி ஒத்துழைப்பு பங்குடைமையின் அடிப்படையில் இலங்கையின் 25 மாவட்டங்களிலும் சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்வாதாரம் உள்ளிட்ட வௌ;வேறு துறைகளில் பல்வேறு அபிவிருத்தி திட்டப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்விஜயத்தின் ஓர் அங்கமாக மட்டக்களப்பு இராமகிருஸ்ண மிஷனுக்கும் விஜயமொன்றை மேற்கொண்டிருந்த உயர் ஸ்தானிகர், இலங்கையிலுள்ள மக்களுக்கு ஆதரவளிப்பதற்காக சுகாதாரம், கல்வி மற்றும் ஆன்மீக துறைகளில் இராமகிருஸ்ண மிஷன் மேற்கொண்டுவரும் பணிகளையும் அர்ப்பணிப்பினையும் பாராட்டியிருந்தார். இவ்விடயத்தில் இந்திய உயர் ஸ்தானிகராலயம் ஊடாக சாத்தியமான சகல உதவிகளையும் வழங்குவதற்கும் அவர் உறுதியளித்தார்.

அத்துடன் மட்டக்களப்பு, காத்தான்குடியில் உள்ள பதுரியா ஜும்ஆ மசூதி மற்றும் மெத்தை பெரிய பள்ளிவாசல் ஆகியவற்றுக்கும் விஜயம் மேற்கொண்டிருந்த உயர் ஸ்தானிகர், இந்திய இலங்கை மக்களின் அமைதி, செழுமை மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றுக்காக பிரார்த்தனையில் ஈடுபட்டார். பதுரியா ஜும்ஆ மசூதியில் இந்திய-இலங்கை சூபி நட்புறவு சங்கம் மற்றும் பதுரியா ஜும்ஆ மசூதியில் ஊடக அலகு ஆகியவற்றின் பெயர்ப்படிகங்களும் உயர் ஸ்தானிகரால் திறந்து வைக்கப்பட்டன. மேலும், மெத்தை பெரிய பள்ளிவாசலில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பிரதிநிதிகள், ஆன்மீக மற்றும் சமூகத் தலைவர்களுடன் கலந்துரையாடல் ஒன்றையும் உயர் ஸ்தானிகர் மேற்கொண்டிருந்தார்.

தேசபிதா மகாத்மா காந்தியின் பிறந்ததினம் ஒக்டோபர் 2 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் நிலையில், மட்டக்களப்பில் 1967 இல் நிறுவப்பட்டிருந்த மகாத்மா காந்தி சிலைக்கு உயர் ஸ்தானிகர் மலரஞ்சலி செலுத்தினார். மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கோவிந்தன் கருணாகரன் மற்றும் மட்டக்களப்பு மேயர் கௌரவ தியாகராஜா சரவணபவன் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

2022 ஒக்டோபர் 02 ஆம் திகதியன்று தொன்மைமிகு இந்து ஆலயமான திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் நடைபெற்ற பூஜைகளில் பங்கேற்று திருகோணமலைக்கான தனது விஜயத்தினை உயர் ஸ்தானிகர் ஆரம்பித்திருந்தார். அங்கு நவராத்திரியை முன்னிட்டு நடைபெற்ற விசேட பூஜைகளை அடுத்து ஆலயத்தின் பிரதம குருக்களால் உயர் ஸ்தானிகருக்கு ஆசி வழங்கப்பட்டது. அத்துடன் ஆலயத்தின் வரலாறு குறித்து ஆலய அறங்காவலர் சபையின் தலைவர் திரு.துஷ்யந்தன் அவர்களால் உயர் ஸ்தானிகருக்கு தெரிவிக்கப்பட்டதுடன், ஆலயத்திற்கு அண்மையிலும் வெகுதூரத்திலும் இருக்கும் பக்தர்களுக்கான யாத்திரை ஸ்தலமாக இந்த ஆலயத்தினை புனருத்தாரணம் செய்வதற்கான கோரிக்கை ஒன்றும் அவரால் கையளிக்கப்பட்டது.

திருகோணமலையில் உள்ள லங்கா இந்திய எண்ணெய் கூட்டுத்தாபன (LIOC) வளாகத்தில் மகாத்மா காந்தியின் 153ஆவது பிறந்ததின நினைவு தினத்தை முன்னிட்டு விசேட நிகழ்வொன்று ஒழுங்கமைக்கப்பட்டிருந்ததுடன் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்த உயர் ஸ்தானிகர், மகாத்மா காந்தியின் உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தி மகாத்மா காந்தி 1927இல் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டதையும் இலங்கை மக்களுடன் அவரது நெருக்கமான உறவினையும் நினைவூட்டியிருந்தார்.

இந்நிகழ்விற்காக LIOC வளாகத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தமைக்காக உயர் ஸ்தானிகருக்கு தனது நன்றியினைத் தெரிவித்திருந்த LIOC முகாமைத்துவப் பணிப்பாளர்  மனோஜ் குப்தா, திருகோணமலையில் LIOC வர்த்தகச் செயற்பாடுகளை பல்துறையிலும் விரிவாக்கும் திட்டங்கள் குறித்து விளக்கமளித்தார். இதேவேளை, குறிப்பாக கடந்த சில மாதங்கள் உட்பட அண்மைய காலப்பகுதியில் இலங்கையின் சக்தித் தேவையினை நிவர்த்தி செய்வதிலும் உற்பத்தித்துறையில் அதிகரித்துவரும் சக்தி தேவையினை பூர்த்தி செய்வதிலும் LIOC யின் வகிபாகத்தை உயர் ஸ்தானிகர் வெகுவாகப் பாராட்டியிருந்தார்.

அத்துடன் LIOC நிறுவனத்தால் அண்மையில் நிறுவப்பட்ட இலங்கையின் முதலாவது உராய்வு நீக்கி (கிறீஸ்) உற்பத்தி ஆலை மற்றும் இயந்திர ஒயில் கலப்பு நிலையம் ஆகியவற்றையும் உயர் ஸ்தானிகர் பார்வையிட்டார். அத்துடன் LIOC மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் ஒன்றிணைவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ள மேல்நிலை எண்ணெய் தாங்கி தொகுதியின் அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் உயர் ஸ்தானிகருக்கு மனோஜ் குப்தாவால் விளக்கமளிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து, கிழக்கு பிராந்திய கடற்படைக் கட்டளைத் தளபதியான ரியர் அட்மிரல் ஜெயந்த குலரத்னே மற்றும் விமானப் படை அக்கடமியின் கட்டளைத் தளபதி எயார் கொமடோர் அசேல ஜயசேகர ஆகியோரையும் உயர் ஸ்தானிகர் சந்தித்திருந்தார். அத்துடன் பிராந்தியத்தின் ஒட்டுமொத்த பாதுகாப்புக்கு பங்களிப்பினை வழங்கவும் இலங்கையின் கடல் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்குமாக 2022 ஆகஸ்ட் 15 ஆம் திகதி இந்தியாவால் இலங்கைக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட டோனியர் விமானத்தின் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு இலங்கை ஆயுதப்படையினருக்கு உறுதுணையாக இருந்துவரும் இந்திய கடற்படையினரின் தொழில்நுட்ப பிரிவினருடனும் உயர் ஸ்தானிகர் சம்பாசனையில் ஈடுபட்டிருந்தார்.

இந்தியாவால் இலங்கைக்கு வழங்கப்பட்டுவரும் தொடர்ச்சியான ஆதரவிற்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையை சேர்ந்த குறைந்த வருமானம் பெறும் 400க்கும் அதிகமான குடும்பங்களுக்கு இந்த இருநாள் விஜயத்தின்போது மனிதாபிமான உதவி அடிப்படையிலான நிவாரணப் பொதிகள் உயர் ஸ்தானிகரால் வழங்கப்பட்டன.

வர்த்தகத்துறை இராஜாங்க அமைச்சர்   ச.வியாழேந்திரனின் பிரசன்னத்துடன் மட்டக்களப்பில் இப்பொருட்கள் கையளிக்கும் நிகழ்வு நடைபெற்றது. அத்துடன் திருகோணமலையில் நடைபெற்ற நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் கௌரவ இரா.சம்பந்தன் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன்  பங்கேற்றிருந்தார்.

இந்தியாவால் இலங்கைக்கு வழங்கப்பட்ட தாராள ஆதரவுக்கும் நன்கொடை உதவித்திட்டங்களுக்கும் இரு மாவட்டங்களிலும் இந்த நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தியவர்கள் இந்தியாவுக்கு நன்றியினைத் தெரிவித்திருந்தனர். ஓர் இரட்டை சகோதரராக, குறிப்பாக தேவைப்படும் சகல சந்தர்ப்பங்கள் உட்பட எப்பொழுதும், இந்தியா இலங்கைக்கு துணை நிற்குமென உயர் ஸ்தானிகர் இங்கு தெரிவித்தார்.

இந்திய உயர்ஸ்தானிகராலயம் – கொழும்பு