டீசல் விலை அதிகரிப்புடன் வருடாந்த பஸ் கட்டணத் திருத்தம் தொடர்பில் இன்றைய தினம் பரிசீலிக்குமாறு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கு சாதகமான பதில் கிடைக்காவிடின் நாளை செவ்வாய்க்கிழமை (28) முதல் பஸ் சேவைகள் நிறுத்தப்படும் என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

வருடாந்த பஸ் கட்டண திருத்தம் ஒவ்வொரு ஜூலை 1 முதல் அமுலுக்கு வரும். குறுகிய காலத்திற்குள் இரண்டு முறை எரிபொருள் விலையேற்றத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இப்போது, பஸ்கள் நட்டத்தில் இயக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.

இன்று (27) முதல் இந்த விலை அதிகரிப்பு இடம்பெற வேண்டும் என பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார். புதிய கட்டணமாக குறைந்தபட்ச விலை 35% முதல் 40% வரை அதிகரிக்கப்பட வேண்டும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.

அதன்படி, புதிய திருத்தத்தின் மூலம் தற்போதைய குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 40 ரூபாவாக அதிகரிக்கப்படும்.இன்று நண்பகல் 12 மணிக்குள் பேருந்து கட்டணத்தை திருத்தியமைக்காவிட்டால் எதிர்காலத்தில் பேருந்து சேவையில் இருந்து விலகி தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
கடந்த 24 மே மாதம் முதல் பஸ் கட்டணம் 19.5 வீதமாக அதிகரிக்கப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.