இறால் பண்ணைக்கு எதிர்ப்புத் தொரிவித்து வாகரையில் ஆர்ப்பாட்டம்

0
236

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று வடக்கு (வாகரை) பிரதேசத்தின் களப்புப் பகுதிகளில் அமைக்கத் திட்டமிடப்படும் இறால் பண்ணைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும்  வகையில்  புதன்கிழமை காலை பிரதேச செயலகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் இறால் பண்ணைத் திட்டம் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்ற கோரிக்கையினை முன்னைவத்தனர். பிரதேச செயலாளரிடம் அது தொடர்பான மகஜரை வழங்க அழைத்த போதும் அவர் வருகை தராமையினால், அலுவலகத்தினுள் சென்று உதவிப் பிரதேச செயலாளரிடம் தங்களது மகஜரைக் கையளித்தனர்.

அத்துடன், ஜனாதிபதிக்கு வழங்குவதற்கான மகஜரை ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் வீ.கே.லிங்கராஜா பெற்றுக் கொண்டார்.
பின்னர் பொலிசாரின் தலையீட்டினையடுத்து அவ் இடத்தினை விட்டு அகன்று சென்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் இறால் பண்ணைத் திட்டம் நிறுத்தப்படவேண்டும் என சில மாதங்களுக்கு முன்னர் போராட்டம் நடத்தியிருந்த போதிலும் தற்போது நில அளவை அதிகாரிகள் அப்பிரNதுசத்தில் அளவை வேலைகளில் ஈடுபட்டுள்ளமையானது தங்களது போராட்டத்திற்குப் பலன் கிடைக்காமை காரணம் என்று தெரிவித்ததுடன், உடனடியாக நில அளவை நிறுத்தப்படவேண்டும். இறால் பண்ணைத் திட்டம் கைவிடப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இறால் பண்ணைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், பிரதேச மக்கள், சிவில் அமைப்புக்கள், சமூக ஆர்வலர்கள் இணைந்து கையளித்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வாகரைப் பிரதேசமானது பல இயற்கை வளங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த வகையில் பெரும்பகுதி கடல் மற்றும் களப்புக்கள் சூழ்ந்த இடமாகவும் ஏனைய பகுதிகள் இயற்கைக் காடுகளாகவும் காணப்படுகின்றன. இங்குள்ள மக்களின் பிரதான தொழில்களாக மீன்பிடி,விவசாயம்,கால்நடை வளர்ப்பு போன்ற தொழில்கள் காணப்படுகின்றன.இவ்வாறு வாகரையில் பல வளங்கள் காணப்பட்டாலும் அங்குள்ள மக்களில் பெரும்பாலானோர் வறிய நிலையிலேயெ காணப்படுகின்றனர்.

இந்த நிலைக்கு இயற்கை வளங்கள் அபகரிக்கப்படுகின்றமையும் ஒரு காரணமாக அமைகிறது. தனியார் துறையினரின் பாரிய ஆக்கிரமிப்புக்கள் காரணமாக பல வளங்களை சாதாரண மக்கள் பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது.
உதாரணமாக கதிரவெளி கிராமத்தில் இல்மனைட் அகழ்வுக்காக கரையோரக் காணிகள் சட்டவிரோதமாக மக்களை ஏமாற்றி சில அரச அதிகாரிகளின் துணையுடன் அபகரிக்கப்பட்டுள்ளமை நாம் அறிந்த விடயமாகும்.

இதற்காக பிரதேச மக்கள்,சமூக ஆர்வலர்கள்,சிவில் அமைப்புக்கள் ஆகியன போராடிக் கொண்டிருக்கின்றனர். மேலே குறிப்பிட்டதைப் போன்றதொரு பாரிய இயற்கை வள அபகரிப்பிற்கான முயற்சியொன்று தற்போது வாகரையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும.; கட்டுமுறிவு  கிராமம் தொடக்கம் வாகரை பிரதேசம் வரையான கரைச்சல்(களப்பு)பகுதியானது இறால் பண்ணை அமைக்கும் திட்டத்திற்காக தற்போது அளவிடப்பட்டுள்ளது.இவ்வாறு அளவிடப்பட்ட பகுதி சுமார் 3000 கெக்டேயர் நிலப்பரப்புடையதாகும்.
இந்த இறால் பண்ணை திட்டம் ஆரம்பிக்கப்பட்டால் பல மடங்கு பாதிப்புக்களை பிரதேச மக்கள் எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும்.

இதன் விளைவுகள் அடுத்த தலைமுறையினரையும் பாதிப்புக்குள்ளாக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மீன்பிடி,கால்நடை வளர்ப்பு,விவசாயம் ஆகிய தொழில்களை ஆதாரமாகக் கொண்ட மக்கள் அனைவரும் இந்த திட்டத்தினால் முற்று முழுதாகப் பாதிக்கப்படுவர்.

குறிப்பிட்ட சிலருக்கு இறால் பண்ணை மூலம் நன்மைகள் கிடைத்தாலும் சுமார் 15000 பேருக்கு மேலான மக்களின் அன்றாட வாழ்வாதாரம்  இந்த திட்டத்தின் மூலம் கேள்விக் குறியாகும் நிலை ஏற்படும்.
வாகரைப் பிரதேசத்தில் சுமார் 4000 பேர்(பால் உற்பத்தி சங்கத்தினரின் தரவுக்கமைய) கால்நடை வளர்ப்பில் ஈடுபடுகின்றனர்.

இவர்கள் வளர்க்கும் சுமார் 27000 மாடுகள் மற்றும் ஆடுகள் இறால் பண்ணை அமைக்க திட்டமிடப்பட்டுள்ள குறித்த கரைச்சை பகுதியிலேயே மேய்க்கப்படுகின்றன. இவ்வாறு குறித்த பகுதி மேய்ச்சல் தரைக்காக  3 தலைமுறைக்கும் அதிகமான காலம் பயன்படுத்தப்படுவதாக பிரதேச மக்கள் மூலம் அறிய முடிந்தது.

இது தவிர வாகரைப் பிரதேச மக்களில் சுமார் பெரும்பாலானோர் களப்புக்கள் மற்றும் குளங்களில் மீன்பிடிப்பதை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். போதிய இலாபம் இல்லா விட்டாலும் தமது வீட்டுக்கான உணவுத் தேவையையேனும் நிறைவேற்றிக்கொள்ள முடிகிறது. இவ்வாறான திட்டங்களுக்காக நிலங்கள் வரையறுக்கப்பட்டு அடைக்கப்படும் போது இது போன்ற மீனவர்களால் சுதந்திரமாக மீன்பிடியில் ஈடுபட முடியாத நிலை ஏற்படும்.

தமது பிரதேச வளத்தைக்கூட பயன்படுத்த முடியாத நிலை உருவாகும். தற்போதும் தமது திறமையால் நாளொன்றுக்கு 2000 ரூபா வரை அன்றாடம் இப்பகுதியில் மீன்பிடித்து வருமானம் பெறுவொரும் இந்த களப்புக்களையே நம்பியுள்ளமை முக்கிய விடயமாகும். மேலும் வேளாண்மை மற்றும் சேனைப் பயிர்ச்செய்கையில் தொடர்ந்தும் ஈடுபடும் மக்களும் குறித்த பகுதியில் வாடிகள் அமைத்து வசிக்கின்றனர்.

இறால் பண்ணை அமைப்பதன் மூலம் இவர்களது விவசாயக் காணிகளும் பறிபோகலாம்.அத்துடன் இப்பகுதியில் பாலை,வீரை,நாவல் போன்ற பல வகையான மரங்களை கொண்ட காடுகளும் இந்த திட்டத்திற்காக அழிக்கப்படும். இந்த காடுகளை ஆதாராமாகக் கொண்டு வாழும் விலங்ககள்,பறவைகளும் நிர்க்கதியாகும் நிலை ஏற்படும்.

இவ்வாறு எண்ணிலடங்காத பல பாதிப்புகள் இந்த திட்டத்தின் மூலம் ஏற்படுவதுடன் எதிர்கால சந்ததியினரையும் பாதிக்கும் விளைவுகளும் உள்ளன. இறால் பண்ணைகளிலிருந்து வெளியேற்றப்படும் இராசாயன கழிவு நீர் ஆற்றில் கலப்பதன் மூலம் ஆற்று நீரும் மாசடையும் நிலை வரும். இங்கு வாழும் பலர் தமது அன்றாட தேவைக்கு இந்த நீரைப் பயன்படுத்துகின்றனர்.

இதனால்; பல நோய்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. மேலும் இராசாயன கழிவு நீர் கலக்கப்படுவதால் மீன்கள் அழிந்து மீன்வளம் எதிர்காலத்தில் முற்றாக அழிவடைவதோடு விவசாய நடவக்ககைளும் பாதிக்கப்படும். கடலரிப்பு மற்றும் வெள்ளப்பெருக்கைத் தடுக்கும் கண்டல் தாவரங்களும் அழிவடைந்து போகும்.

இவ்வாறு பல பாதிப்புக்களை ஏற்படுத்தும் இந்த திட்டத்திற்கு எதிராக பிரதேச மக்கள்,சிவில் அமைப்பினர், மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோர் தொடர்ந்தும் போராடி வருகின்ற நிலையில் சில அதிகார வரக்கத்தினர் இந்த திட்டத்தினை செயற்படுத்த முனைகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இறால் பண்ணை ஆரம்பிப்பதால் ஏற்படக்கூடிய விளைவுகள்
• கால்நடைகளின் மேய்ச்சல் தரைகள் அழிவடைவதால் உரிமையாளர்கள் பாதிக்கப்படுவர்
• மீன்பிடித் தொழிலாளர்கள் தொழிலை இழப்பர்
• விவசாய நடவடிக்கைகள் பாதிப்படையும்
• கண்டல் தாவரங்கள் அழிவடையும். இதனால் கடலரிப்பு,வெள்ளப்பெருக்கு அதிகரிக்கும்.
• கழிவு நீர் கலப்பதால் ஆற்று நீர் மாசடையும்
• மக்களுக்கு தொற்று நோய்கள் ஏற்படும்
• மீன்வளம் அழிவடையும்
• காடுகள் அழிக்கப்பவதால் வன விலங்குகளின் வாழிடங்கள் பாதிக்கப்படும்
• எதிர்கால சந்ததியினரின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்.
• பிரதேச மக்கள் தமது வாழ்வாதாரத்திற்காக அதிகார வர்க்கத்தினரிடம் கையேந்த வேண்டிய நிலை ஏற்படும்.

இவ்வாறு பிரதேச மக்கள்,விலங்குள் மற்றும் இயற்கை வளங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைக்கத் திட்டமிடப்படும் இறால் பண்ணை என்ற பெயரிலான வள அபகரிப்பிற்கு பிரதேச மக்கள்,சிவில் அமைப்புக்கள்,இயற்கை ஆர்வலர்கள் என்ற வகையில் எதிர்ப்பைத் தெரிவிப்பதோடு உரிய அதிகாரிகள் மக்களின் வேண்டுகோளை ஆராய்ந்து இத் திட்டத்தை முழுமையாகத் தடை செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here