இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்துக்குள் ஊடுருவிய மாணரொருவர் நேற்று குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்துக்குள் ஊடுருவி அண்மையில் வெளியிடப்பட்ட 2021 உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய 02 இலட்சத்து 72,682 மாணவர்களின் பெறுபேறுகளைத் திருடி பரீட்சை மற்றும் பெறுபேறுகளை சரிபார்க்கும் வகையில் தனியான இணையத்தள அணுகலை (web access)) ஏற்படுத்திய பாடசாலை மாணவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

பரீட்சையில் தோற்றிய மாணவர்களின் பெயரை உள்ளீடு செய்வதன் மூலம் பெறுபேறுகளை சரிபார்க்கும் வகையில் தனியான இணைய அணுகலை (web access) இவர் தயார் செய்ததாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இவர் காலியிலுள்ள பிரபல ஆண்கள் பாடசாலையில் உயர்தரத்தில் தகவல், தொடர்பாடல் தொழிநுட்பத்தை கற்கும் மாணவர் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

கடந்த 06ஆம் திகதி பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேனவினால் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு வழங்கிய முறைப்பாட்டின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணையின் விளைவாக இந்த மாணவர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

பரீட்சை திணைக்களத்தின் இணையத்தளத்தின் தரவுகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட புதிய இணைய அணுகலை இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சையை எதிர்கொள்ளும் மாணவர்களின் வாட்ஸ்அப் உள்ளிட்ட பல்வேறு சமூக ஊடக வலையமைப்பு குழுக்களில் பகிர்ந்துகொண்டு இந்த மாணவர் தனது web access ஐ விளம்பரப்படுத்தியுள்ளார். அதன் மூலம் ஏராளமானோர் தேர்வு முடிவுகளைப் பார்த்ததாகவும் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட மாணவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இதற்கு முன்னரும் ஒரு தடவை பரீட்சை திணைக்களத்தின் இணையத்தளத்துக்குள் ஊடுருவல் செய்து தனது இணைய அணுகல் (web access) மூலம் இவ்வாறு பரீட்சை பெறுபேறு ஆவணம் வெளியிடப்பட்டதாக தெரிவித்தார். மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.