‘வானலைகளில் ஒரு வழிப்போக்கன்’ என்ற தலைப்பில் அப்துல் ஹமீத் எழுதிய ஊடக வாழ்க்கை அனுபவ நூல் அமெரிக்காவில் வெளியிடப்படவுள்ளது. இலங்கை வானொலியில் மிக இளவயதிலேயே அறிவிப்பாளராகி, வானொலியின் பல்வேறு துறைகளிலும் பங்களிப்புகளை நல்கி, ஒலிபரப்புத் துறையில் மட்டுமன்றி தொலைக்காட்சித்துறை, திரைப்படத்துறை எனப் பல்வேறு தளங்களிலும் 54 ஆண்டுகளுக்கு மேல் தடம் பதித்த அறிவிப்பாளர் பி. எச். அப்துல் ஹமீத் தனது அரை நூற்றாண்டு கடந்த வாழ்க்கை அனுபவங்களை நூலாக எழுதியுள்ளார்.

‘வானலைகளில் ஒரு வழிப்போக்கன்’ என்ற தலைப்பில் அமைந்த இந்த நூல், அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் எதிர்வரும் ஜுலை 1 முதல் 4 -ஆம் திகதிவரை நடைபெறவுள்ள ‘வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் பேரவை’ முத்தமிழ் விழாவில் வெளியிடப்படவுள்ளது.

இவ்விழாவில் இம்முறை பிரதான மேடையில் வெளியிடப்படுவதற்கு இந்நூல் மட்டுமே தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. தென்கிழக்காசியாவில் முதல் வானொலி நிலையத்தைப் பெற்றுக் கொண்டவர்கள் என்ற பெருமையும் புகழும் பெற்றவர்கள் இலங்கையர் என்ற போதிலும் இந்த விடயங்கள் தொடர்பாக தேடுதல்கள் – ஆய்வுகள் அவசியமானவை. அவை பதிவுசெய்யப்பட வேண்டியவையாகும்.

‘இலங்கை வானொலிக் கலைக்கூடத்திலிருந்து எத்தனை கலைஞர்கள் உருவாகியிருக்கிறார்கள்? எத்தனை இலக்கிய ஆளுமைகள் தங்கள் படைப்புகளை வானொலி ஒலிபரப்பினூடாக வெளிக்கொணர்ந்திருக்கிறார்கள்? எத்தனை ஆளுமைகள் இந்த நிலையம் வழியாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்?’

அவரது இந்நூல் அமெரிக்காவில் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் வெளியிடப்படுவது சிறப்புக்குரியதாகும். ஓர் ஊடகவியலாளரது வாழ்க்கை அனுபவமாக மட்டுமன்றி, இலங்கை வானொலி வரலாறு குறித்த ஒரு சிறந்த ஆவணப் பதிவாகவும் இந்நூல் விளங்கும்.

இளஞ்சேரன்…