எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெண் பதில் அதிபர் அவமதிப்பு

0
254

கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் பெற்றுக்கொள்ள வந்த பெண் பதில் அதிபர் ஒருவர் தனது பிள்ளையுடன் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டார்.

அரச உத்தியோகத்தர்களுக்கு எரிபொருள் வழங்கப்படமாட்டாது என எரிபொருள் விநியோகத்தர்களால் அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில் எரிபொருள் பெற்றுக்கொள்ள வந்த சிலரால் அரச உத்தியோகத்தர்களை தரக்குறைவாக பேசும் செயற்பாடுகள் பரவலாக முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கடமைக்கு செல்ல எரிபொருள் பெற்றுக்கொள்ள சென்ற அந்த பெண் பதில் அதிபர் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டார்.

இவ்விடயம் குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், ”கடமைக்கு செல்ல வந்த என்னை தரக்குறைவாக பேசுகின்றனர். கல்வி வேண்டாம், பெற்றோலே வேண்டும் என்கின்றனர்.

ஆசிரியர்கள் என்றால் தரக்குறைவானவர்கள் இல்லை. உங்கள் பிள்ளைகளுக்கே கல்வி புகட்டுகின்றோம். எங்களுக்கு முறையாக எரிபொருள் கிடைக்க வேண்டும். இல்லையேல் கற்பித்தல் செயற்பாட்டை முன்னெடுக்க முடியாது. நாகரீகமின்றி தரக்குறைவாக பேசுமளவிற்கு ஆசிரியர்கள் இல்லை. இதற்கு நியாயமான தீர்வு வேண்டும்.

அதுவரை ஆசிரியர்கள் பணிக்கு செல்லாது போராட வேண்டும். இந்த விடயம் தொடர்பில் கல்வி அமைச்சர் மற்றும் தொழிற்சங்கத்திற்கு அறிவித்துள்ளேன். நிரந்தரமான தீர்வு கிடைக்க வேண்டும். எமது கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டும்” என தெரிவித்தார்.

இதன்போது அவருடன் பொலிஸார் மற்றும் பொதுமக்கள் சிலர் கலந்துரையாடி போராட்டத்தை கைவிடுமாறு கோரியிருந்தனர். நிரந்தர தீர்வு எட்டப்பட வேண்டும் என கூறி போராட்டம் கைவிடப்பட்டதுடன், அவர் பாடசாலை கடமைக்கு செல்ல எரிபொருள் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இவ் விடயம் தொடர்பில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை ஒன்றையும் முன்வைத்து உள்ளது.

ஒவ்வொரு ஆசிரியரும் ஒவ்வொரு சமூகத்தின் விளக்குகள். தயவு செய்து எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களும் அரசாங்க அதிபர்களும் கல்வி அமைச்சும் கல்வித் திணைக்களமும் இதற்கு விரைந்து தீர்வுகாண வேண்டும் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கோரியுள்ளது.

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்தி குறிப்பிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தற்போது நாட்டில் உள்ள சூழ்நிலை எல்லோருக்கும் பொதுவானது.

ஆனால் ஆசிரியர்களின் கடமையும் அவர்கள் ஆற்றும் பணியும் வித்தியாசமானது. இந்த நிலையில் எரிபொருளுக்காக ஆசியர்களைக் காக்க வைப்பதும் அவர்களோடு அநாகரிகமாக நடந்து கொள்வதனையும் ஏற்க முடியாது.

சமூகத்தில் உள்ள குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் கல்வியூட்டி அவர்களைப் பெரியவர்களாக்கும் ஆசிரியர்களை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அவமானப்படுத்துவமும் புறக்கணிப்பதும் அநாகரிகமானது.

இத்தகைய நிலை தொடருமாக இருந்தால் ஆசிரிய பணியில் இருந்து ஒதுங்கவேண்டிய நிலை ஏற்படும். இன்று கிளிநொச்சியில் ஒரு ஆசிரியை விட்ட கண்ணீர் ஒட்டுமொத்த ஆசிரியர்களும் விட்ட கண்ணீருக்குச் சமமானது” என அவ் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here