கஜிமாவத்தை வீட்டுத்தொகுதி தீ விபத்து ; பக்கச்சார்பற்ற விசாரணை அவசியம்

0
162

கொழும்பு, கிராண்ட்பாஸ் பிரிவிற்குட்பட்ட தொட்டலங்க கஜிமாவத்தை வீட்டுத் தொகுதியில், ஏற்பட்ட தீ விபத்தில் இடம்பெயர்ந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நேற்று கொழும்பு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

கொழும்பு மாவட்டச் செயலகப் பிரிவுக்குட்பட்ட மாதம்பிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ள குறித்த பிரதேசத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் 71 வீடுகளில் இருந்த 306 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். 60 வீடுகள் முழுமையாகவும், 11 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

தீ விபத்தினால் பாதிக்கப்பட்டு, இடம்பெயர்ந்துள்ள 306 பேரில் 106 சிறுவர்கள் அடங்குவர். இதற்கமைய, பாதிக்கப்பட்ட மக்கள் மோதரை உயன சனசமூக மண்டபத்திலும் களனி நதீ விகாரையிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ நிலையம், கொழும்பு மாநகர சபை, மாதம்பிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு, பொலிஸார் மற்றும் முப்படை ஆகியன இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு, பானம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தொடர்ந்தும் வழங்கி வருகின்றன.

இடம்பெயர்ந்துள்ளவர்களுக்கான சுகாதார வசதிகள், பிரதேச சுகாதார சேவைகள் பணிப்பாளரின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்படுகிறது. சர்வோதய உட்பட பல அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் அக்குடும்பங்களுக்கு தேவையான பொருட்கள் மற்றும் உலர் உணவுகள் வழங்கப்பட்டதாகவும் மாவட்டச் செயலாளர் இந்தக் கலந்துரையாடலில் குறிப்பிட்டார்.

2007 ஆம் ஆண்டு தொடக்கம் பாலத்துரை கஜீமாவத்தை குடியிருப்புகள், நகர அபிவிருத்தி அதிகார சபையினால் இடைநிலை முகாமாக பராமரிக்கப்பட்டு வந்ததாகவும், 2014 ஆம் ஆண்டு இறுதியில் அங்கு வசித்தவர்கள் அனைவருக்கும் வீடுகள் வழங்கப்பட்டதாகவும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர சுட்டிக்காட்டினார்.

இருப்பினும் 2015ஆம் ஆண்டு தொடக்கம் குறித்த காணியை, சட்டவிரோத குடியிருப்பாளர்கள் அவ்வப்போது ஆக்கிரமித்துள்ளதாகவும் நகர அபிவிருத்தி அதிகார சபை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

மேற்படி வீடுகள் கடந்த இரண்டு வருடங்களுள் 03 தடவைகள் தீக்கிரையாகி இருப்பதனால், நேற்றுமுன்தினம் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் முறையான பக்கச்சார்பற்ற விசாரணைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனவும் இக்கலந்துரையாடலில், தீர்மானிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here