தம்மை கற்பழிக்க முயன்ற முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவரை கொலை செய்த சோமாலிய நாட்டு சிறுமி ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். எகிப்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. பொலிஸாரிடம் சரணடைந்த 15 வயதான அந்த சிறுமி நான்கு நாட்களின் பின்னர் விடுவிக்கப்பட்டிருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தற்பாதுகாப்பிற்காகவே அந்த சிறுமி செயற்பட்டதற்கான ஆதாரத்தை காண்பிக்க பொலிஸார் மற்றும் மருத்துவ விசாரணையாளர்கள் இணங்கியதாக எகிப்து அரச வழக்கறிஞர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

மேலதிக விசாரணைகள் நிலுவையில் இருக்கும் நிலையிலேயே கடந்த வெள்ளிக்கிழமை அந்த சிறுமி விடுவிக்கப்பட்டார். அந்த முச்சக்கரவண்டி ஓட்டுநர் தம்மை யாரும் இல்லாத இடத்துக்கு அழைத்துச் சென்று கற்பழிக்க முயன்றதாக அந்த சிறுமி பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தாக்குதல்தாரி என குற்றம்சாட்டப்பட்டவரோடு போரடிய அந்த சிறுமி அவரை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பித்துள்ளார்.

அந்த ஆடவரின் சடலம் தலைநகர் கெய்ரோவுக்கு அருகில் கிசா நகரில் கடந்த 17 ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் எகிப்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதோடு அந்த சிறுமியின் விடுதலைக்கு பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.