இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் முன்னோடியான, இலங்கை – இந்திய காங்கிரஸ் உதயமாகி இன்றோடு 83 ஆண்டுகள். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசின் பங்காளியாகவே 84 ஆவது ஆண்டில் காலடி வைத்துள்ளது காங்கிரஸ்.
இலங்கைவாழ் இந்திய வம்சாவளி மக்களின் நலன் கருதியும், அடக்குமுறைகளுக்கு எதிராகவும், உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும், இலங்கை அரச கட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நோக்கிலுமே இந்தியாவின் தலையீட்டுடன் ( மகாத்மா காந்தி, நேரு போன்றவர்களின் பங்களிப்புடன்) 1939 இல் இதேபோன்றதொரு நாளில் இலங்கை – இந்திய காங்கிரஸ் உதயமானது.
1947 இல் நடைபெற்ற இலங்கையின் முதலாவது பொதுத்தேர்தலில் இலங்கை – இந்திய காங்கிரஸ் 8 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் 7 தொகுதிகளில் அக்கட்சி வெற்றிநடைபோட்டது. எழுவர் நாடாளுமன்றம் சென்றனர்.
1.சௌமியமூர்த்தி தொண்டமான் – 9,386
நுவரெலியா தொகுதி.
2.சீ.வி. வேலுபிள்ளை – 10,645
தலவாக்கலை தொகுதி.
3.கே. குமாரவேலு – 6,722
கொட்டகலை தொகுதி.
4.ஜீ.ஆர்.மோத்தா – 9,086
மஸ்கெலியா தொகுதி.
5.கே. இராஜலிங்கம் – 7,933
நாவலப்பிட்டிய தொகுதி.
6.எஸ்.எம். சுப்பையா – 27,121
பதுளை தொகுதி.
7.டி. ராமானுஜம் – 2,772
(அளுத்நுவர தொகுதி)
(ஹப்புதலை தொகுதியில் மட்டுமே தோல்வி)
1948 இல் மலையகத் தமிழர்களின் குடியுரிமை – வாக்குரிமை என்பன பறிக்கப்பட்டன.
1950 காலப்பகுதியில் இலங்கை – இந்திய காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸாக பெயர் மாற்றப்பட்டது.
1960 மற்றும் 1965 களில் தொண்டமானுக்கு இரு தடவைகள் தேசியப்பட்டியல் ஊடாக எம்.பியாக வாய்பளிக்கப்பட்டது. 70 இல் வாய்ப்பு மறுக்கப்பட்டது.
இதற்கிடையில் காங்கிரசுக்குள் பிளவுகளும் ஏற்பட்டன. அசீஸ், சி.வி. வேலுபிள்ளை, வெள்ளையான் போன்ற முக்கிய தளபதிகள் காங்கிரஸில் இருந்து வெளியேறினர். காங்கிரஸில் இருந்து வெளியேறிய வெள்ளையன், 1965 இல் தொழிலாளர் தேசிய சங்கத்தை நிறுவினார்.
1977 இல் இ.தொ.காவின் சார்பில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு தொண்டமான் வெற்றிபெற்றார். ஐ.தே.க. ஆட்சியில் இணைந்தார். 78 இல் அமைச்சரானார்.
1977 இற்கு பிறகு 1989 இல்தான் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. அத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் களமிறங்கிய இ.தொ.கா. வேட்பாளர்கள் இருவரும் தோல்வியடைந்தனர். எனினும், இ.தொ.காவுக்கு இரு தேசியப்பட்டில் ஆசனங்களை ஐக்கிய தேசியக்கட்சி வழங்கியது. சௌமியமூர்த்தி தொண்டமானும், தேவராஜும் சபைக்கு வந்தனர். அமைச்சு பதவிகளையும் வகித்தனர். ரணிலும் அமைச்சரவையில் இடம்பிடித்திருந்தார்.
1999 சௌமியமூர்த்தி தொண்டமான் காலனாமார். அதுவரை அவர் பிரதான இரு கட்சிகளினது அரசுகளிலும், அமைச்சு பதவிகளை வகித்தார்.
சௌமியமூர்த்தி தொண்டமானின் மறைவின் பின்னர் காங்கிரஸ் இரண்டாவது பெரும் பிளவை சந்தித்தது. இராஜரட்னம், சென்னன், யோகராஜ் உட்பட முக்கிய பிரமுகர்கள் வெளியேறினர்.
அதன்பின்னர் தலைமைப்பதவி ஆறுமுகன் தொண்டமான் வசமானது. உயிரிழக்கும்வரை காங்கிரஸின் தலைவராக அவரே செயற்பட்டார். தற்போதைய தலைவராக செந்தில் தொண்டமான் செயற்படுகின்றார். பொதுச்செயலாளராக ஜீவன் தொண்டமான் பதவி வகிக்கின்றார்.
அரசியலை விடவும் தொழிற்சங்கமே இ.தொ.காவின் பலமாக இருந்தது. தொழிற்சங்க உரிமைகளை வென்றெடுக்க அரசியல் பலத்தை அக்கட்சி பயன்படுத்தியது. இன்றளவிலும் தொழிற்சங்கத்திலேயே இ.தொ.காவின் உயிர்நாடி தங்கியுள்ளது.
அரசியலில் ஆளுந்தரப்புடன் ‘கூட்டணி’ என்பது இ.தொ.காவுக்கு கைவந்த கலை. வெல்லும் குதிரைக்கு பந்தயம் கட்டும் தந்திரத்தையும் நன்கு கற்றுவைத்துள்ளது. கடைசியாக நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் இதற்கு நல்ல சான்று.
குடியுரிமையை பெறுவதில் பங்களிப்பு உட்பட அரசியல் மற்றும் தொழிற்சங்க துறைகளில் மக்களுக்காக இ.தொ.கா. களமாடிய சம்பவங்களும் உள்ளன.
ஆர்.சனத்
படத்தில் இருப்பவர்கள் – காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர்களான சௌமியமூர்த்தி தொண்டமான, கே. இராஜலிங்கம்.