கிராம வாசிகளால் காணி அபகரிப்பு குயின்ஸ்டவுன் தோட்டத்தில் பதற்றம்

0
175

ஹாலி-எலையைச் சேர்ந்த குயின்ஸ்டவுன் பெருந்தோட்டத்தின் ஒரு பகுதியை, கிராம வாசிகள் ஆக்கிரமித்து தம் வசமாக்கிக் கொண்டதையடுத்து, தோட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.

இச்சம்பவம் இன்று குயின்ஸ்டவுன் பெருந்தோட்டத்தின் கிராமத்தை அண்மித்த தோட்டக் காணியில் இடம் பெற்றுள்ளது.

ஹாலி- எலையில் 70 குடும்பங்களைச் சார்ந்த கிராமிவாசிகள், குயின்ஸ்டவுன் பெருந்தோட்டத்தின் கிராமத்தை அண்மித்த தோட்டக் காணியை ஆக்கிரமித்து, தமக்குத்தாமே எல்லைகள் போட்டு பிரித்துக் கொண்டு செயற்பட்டனர். இது குறித்து குயின்ஸ்டவுன் பெருந்தோட்ட முகாமையாளர் ஹாலி-எலைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றினை செய்துள்ளார். இம்முறைப்பாட்டையடுத்து, ஹாலி-எலைப் பொலிசார் ஸ்தலத்திற்கு விரைந்து, பெருந்தோட்டத்தை ஆக்கிரமித்திருந்த கிராமவாசிகளுடன் சுமூக பேச்சு வார்த்தைகளை மேற்கொண்டு, அங்கிருந்து தற்காலிகமாக அவர்களை வெளியேறுமாறு கூறிதையடுத்து, ஆக்கிரமிப்பாளர்கள் பொலிசார் வழங்கிய உறுதிமொழிக்கமைய, பெருந்தோடடத்தை விட்டு வெளியேறினர்.

குறிப்பிட்ட பெருந் தோட்டக்காணி காடாக்கப்பட்டு வருவதினால், அக்காணியை விவசாயத்திற்கு பயன்படுத்துவதற்கும், வெறுங்காணிகளில் விவசாயத்தை மேற்கொள்ள அரசு விடுத்துள்ள கோரிக்கைக்கமையவுமே, தமக்குத்தாமே குறிப்பிட்ட காணியை பிரித்துக் கொண்டு செயல்பட ஆரம்பித்தோம். தோட்ட முகாமைத்துவம் ஏற்றுக் கொள்ளக் கூடிய நிபந்தனைகளை முன்னிலைப்படுத்தி, அக்காணியில் விவசாயத்தை மேற்கொள்ள அனுமதியைப் பெற்றுத் தருமாறு, கிராமவாசிகள் பொலிசாரிடம் கேட்டுக் கொண்டனர்.

பொலிசாருக்கும் கிராமவாசிகளுக்குமிடையே ஏற்பட்ட சுமூகப் பேச்சுவார்த்தையின் போது, பொலிசார் ‘குறிப்பிட்ட தோட்ட முகாமையாளர், தோட்டத்தை பொறுப்பேற்ற கம்பனி முகாமைத்துவத்தினர், பிரதேச செயலாளர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட குழுவினருடன் பேச்சு வார்த்தைகளை மேற்கொண்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்று’ கூறினர். இக் கூற்றினையடுத்து பெருந்தோட்டத்தை ஆக்கிரமித்த கிராமவாசிகள், தோட்டத்தை விட்டு தற்காலிகமாக வெளியேறினர்.

கிராமவாசிகள் குயின்ஸ்டவுன் பெருந்தோட்டத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமித்திருப்பதையும், பொலிசார் ஆக்கிரமிப்பாளர்களுடன் கலந்துரையாடுவதையும், அது தொடர்பான ஏனைய படங்களையும் இங்கு காணலாம்.

     பதுளை நிருபர்                  

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here