அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக நுழைவதற்கு கொள்கலனில் பதுங்கிச்சென்ற 46 அகதிகள் கடும் வெயிலின் காரணமாக நீரின்றி இதயம் வரண்டு பலியாகியுள்ளார்கள். இந்தச் சம்பவம் நேற்று அமெரிக்காவின் சன் அன்ரனியோ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மெக்ஸிக்கோவிலிருந்து அமெரிக்காவிற்குள் சட்ட விரோத குடியேற்றவாசிகள் நுழையும் வழக்கமான இடமொன்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பாரிய கொள்கலன் பொருத்திய பார ஊர்தியிலிலிருந்து, தங்களைக் காப்பாற்றுமாறு குரல் கேட்டதால், அப்பகுதியைச் சேர்ந்தவர் ஒருவர், கதவைத் திறந்து பார்த்தபோது, அதற்குள் பெருந்தொகையானவர்கள் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார்கள் என்று கூறப்படுகிறது.

உடனடியாக அவசர சேவைப்பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு விரைந்து வந்த பொலீஸார், பார ஊர்தியிலிருந்து 46 சடலங்களை மீட்டுள்ளனர். உயிருடன் மீட்கப்பட்ட 4 சிறுவர்கள் உட்பட 16 பேர் அருகிலிருந்த வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.