மஹாவலி கங்கையிலிருந்து இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

நாவலப்பிட்டி- கோணவல பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய பெண்ணொருவரே கடந்த 3 நாட்களாக காணாமல் போயிருந்த நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நாவலப்பிட்டி பொது வைத்தியசாலையில் கடந்த 27ஆம் திகதி, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தனது தாயைப் பார்க்கச் செல்வதாகத் தெரிவித்து, குறித்த பெண் சென்றதாகவும் பின்னர் மாலையாகியும் வீடு திரும்பாத நிலையில், வீட்டார் நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்த நிலையில், நாவலப்பிட்டி- கித்துல்கொட பிரதேசத்திலுள்ள மஹாவலி ஆற்றில் பெண்ணொருவரின் சடலம் மிதப்பதாக கிடைத்த தகவலுக்கமைய பொலிஸாருடன் காணாமல் போன பெண்ணின் உறவினர்களும் அங்கு சென்றுள்ளனர். இதன்போது, அப்பெண்ணின் உறவினர்களால் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண்ணிண் மூத்த மகள் இம்முறை சாதாரணதர பரீட்சையில் தோற்றி வருவதாக தெரிவித்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.