இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவரான எரிக் சொல்ஹெய்ம் ஊடாக நாட்டுக்குள் நிதியை கொண்டு வரவே அவருக்கு ஆலோசகர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக சிங்கள வார ஏடொன்று பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியான அதன் அரசியல் பத்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சுற்றுலா பயணியாக அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை வெறுங்கையுடன் சந்திக்க வந்த எரிக் சொல்ஹெய்முக்கு சிறப்பு பதவி வழங்க ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுத்தார். அது அவரை அரச தலைவரின் சுற்றுச்சூழல் விவகாரங்களுக்கான அனைத்துலக ஆலோசகராக நியமிக்கின்றது.
இந்த வகையில், திடீரென சொல்ஹெய்மை இலங்கைக்கு ரணில் வரவழைத்து இவ்வாறான அரச தலைவருக்கு ஆலோசனை வழங்குவதற்கும் ஒரு காரணம் உள்ளது. அது வேறு எதனாலும் அல்ல, அனைத்துலக அமைப்புகள் சுற்றுச்சூழலுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்குவதால் தான்.
இதன்படி, அனைத்துலக உதவிகளைப் பெறுவதற்கான அனைத்து வழிகளும் தடைப்பட்டுள்ளமையினால், இந்த சுற்றாடல் மாற்றங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில், சொல்ஹெய்மின் பழைய தொடர்புகளைப் பயன்படுத்தி இலங்கைக்கான சில உதவிப் பணத்தைப் பெற்றுக் கொள்ள அரச தலைவர் திட்டமிட்டுள்ளார்.

இதனால்தான், சொல்ஹெய்ம் திடீரென இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு அரச தலைவரின் சுற்றுச்சூழல் விவகாரங்களுக்கான அனைத்துலக ஆலோசகர் பதவி வழங்கப்பட்டது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.