சிங்கள மக்களுக்கு அவர் ஊழல்வாதி, ஆனால் தமிழர்களுக்கு அவர் இனப்படுகொலையாளி என்ற முழக்கத்துடன் அமெரிக்காவின் நியூ யோர்க்கில் இருக்கின்ற சிங்கப்பூர் தூதரகத்தின் முன் அணிதிரண்ட தமிழர்கள், கோட்டாபாய ராஜபக்சவை கைது செய்து, நீதியின் முன் நிறுத்து என குரல் எழுப்பியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் இடம்பெற்ற கோட்டா அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்துக்கு அஞ்சி நாட்டை விட்டு வெளியேறி தற்போது சிங்கப்பூரில் நிலைகொண்டுள்ள கோட்டாவை உலகளாவிய நியாயாதிக்கத்தின் கீழ் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

கோட்டாபய ஓர் போர்குற்றவாளி – சர்வதேச நீதிமன்றுக்கு பாரப்படுத்துங்கள் என்ற முழக்கங்கள் எழுப்பபட்டன. பின்னர் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனால் சிங்கப்பூர் தூதரக அதிகாரிகளிடம் கோரிக்கை கையளிக்கப்பட்டது.

போர் குற்றங்களில் ஈடுபட்ட இலங்கை அரசியல், இராணுவ தலைவர்களுக்கு எதிராக ஐ.நா உறுப்பு நாடுகள், உலகளாவிய நியாயாதிக்கத்தின் கீழ் சட்ட நடவடிக்கையினை முன்னெடுக்க வேண்டும் என ஐ.நா மனித உரிமைச்சபையின் ஆணையாளர் மிச்சல் பசேலே அம்மையார்; ஐ.நா உறுப்பு நாடுகளை நோக்கி முன்னர் அழைப்பொன்றினை விடுத்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடதக்கது.