பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தால், சிறப்புத்தேர்ச்சி பெற்ற இலங்கை உயர்தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் வைபவம், 16 ஓகஸ்ட் 2022 கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

ஓகஸ்ட் 14 ம் தினம் கொண்டாடப்பட்ட பாகிஸ்தானின் 75 வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு இந்த விழா நடைபெற்றது. 2006 ஆம் ஆண்டு முதல் உயர்தர மற்றும் சாதாரண தரம் பயின்ற மாணவர்களுக்கு பாகிஸ்தான் அரசாங்கத்தினால் புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதுவரை சுமார் 2300 இலங்கை மாணவர்கள் – ஜின்னா புலமைப்பரிசில் திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர். பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) உமர் பாரூக் பர்கி தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது. இந் நிகழ்வில், கல்வி அமைச்சா் சுசில் பிரேமஜயந்த பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்
இங்கு உரையாற்றிய உயா் ஸ்தானிகா் தெரிவித்தாவது –

சிறந்த கல்வி வாய்ப்புகளுடன் இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவதில் இலங்கையின் பெருமைமிக்க பங்காளியாக பாகிஸ்தான் திகழ்வதாகவும், மருத்துவம், பல் மருத்துவம், மருந்தியல் மற்றும் பொறியியல் ஆகிய துறைகளில் பாகிஸ்தான் தொழில்நுட்ப உதவித் திட்டம் (PTAP) மற்றும் அல்லாமா இக்பால் புலமைப்பரிசில் உட்பட பல்வேறு புலமைப்பரிசில் திட்டங்களின் கீழ் பாகிஸ்தான் அரசாங்கம் 1976 ஆம் ஆண்டு முதல் இலங்கை மாணவர்களுக்கு உயர்கல்வி புலமைப்பரிசில்களை வழங்கி வருவதாகவும் அவர் தனது வரவேற்பு உரையில் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த . தனது உரையில், பாகிஸ்தான் அரசாங்கத்தின் இப்புலமை பரிசில் திட்டத்தை பாராட்டியதோடு ஜின்னா புலமைப்பரிசில் திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களையும் பாராட்டினார்.

மேலும் அவரது உரையில், பாகிஸ்தான் நாட்டின் உருவாக்கத்திற்கு காரணமான பாகிஸ்தானின் தேசிய தந்தை , குவாய்த் -இ-ஆசாம், முஹம்மது அலி ஜின்னாவுக்கு தமது மரியாதையை செலுத்தியதோடு, இந்த புலமைப்பரிசில்கள் இலங்கயில் உள்ள சகல இன மாணவர்களுக்கும் எவ்வித பாரபட்சமின்றி வழங்கப்படுவது மிகவும் வரவேற்கத்தக்க விடயமாகும் எனவும் குறிப்பிட்டார்.

பாக்கிஸ்தான் இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையிலான உறவுகளை நினைவுகூர்ந்த அவர், 2006 ஆம் ஆண்டு முதல் பல இலங்கை மாணவர்களுக்குப் பாகிஸ்தான் அரசாங்கம் புலமைப்பரிசில் மற்றும் உயா்கல்வி பயில்வதற்காக பாகிஸ்தானில் வசதி அளிப்பது பயனளித்து வரும் ஜின்னா புலமைப்பரிசில் திட்டத்தைப் பாராட்டியமை குறிப்பிடத்தக்கது.