இலங்கை மருத்துவச் சபையில் பதிவு செய்துகொண்டுள்ள இரண்டு மருத்துவர்கள் சிறுநீரக விற்பனை தொடர்பான வர்த்தகத்தில் ஈடுபட்டு வருவதாக கொழும்பு ஹெவ்லொக் வீதியில் வசித்து வரும் மருத்துவர் ருவான் எம்.ஜயதுங்க முறைப்பாடு செய்துள்ளார். இந்த மருத்துவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் கண் மருத்துவமனை ஆகியவற்றில் சேவையாற்றி வருவதாக தெரியவந்துள்ளது.

இந்த சிறுநீரக வியாபாரம் சம்பந்தமான விசாரணை நடத்துமாறு கோரி பொலிஸ் மா அதிபருக்கும் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

2013 ஆம் ஆண்டு இந்த சிறுநீரக வியாபாரம் தொடர்பாக இந்திய பிரஜை ஒருவரை குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகள் கைது செய்து, விசாரணைகளை நடத்தி இருந்தனர்.

இந்தியாவை சேர்ந்த அந்த சந்தேக நபர் மேற்படி மருத்துவர்கள் தொடர்பான தகவல்களை வெளியிட்டிருந்ததாகவும் இலங்கை மருத்துவச் சபையிடம் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள சில மாநிலங்களை சேர்ந்த நபர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு அவர்களிடம் இருந்து சிறுநீரகங்கள் பெற்றுக்கொள்ளப்படுவதாகவும் அவற்றை சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கி சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை செய்வதற்கு பெருந்தொகை பணம் அறவிடப்படுவதாகவும் கடந்த காலங்களில் செய்திகள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.