பிரதேச செயலகங்களில் மாவட்டப் பதிவாளர் பிரிவினால் வழங்கப்படும் பிறப்பு/ இறப்பு/ திருமண சான்றிதழ் பிரதிகள் வழங்கும் நடவடிக்கைகள், அனைத்து காணி பதிவாளர் அலுவலக சேவைகள் என்பன திங்கள் மற்றும் புதன்கிழமைகளில் மாத்திரம் மேற்கொள்ளப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து சிக்கல்களை கருத்திற் கொண்டு, அரசாங்க அலுவலகங்களில் ஊழியர்களை சேவைக்கு அழைப்பது மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மேற்கொள்ளப்படுவதால், எதிர்வரும் 10 நாட்களுக்கு குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, பதிவாளர் நாயகம் பீ.எஸ்.பீ. அபேவர்தன விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளார்.

ஆயினும் பத்தரமுல்லை, இசுருபாயவிலுள்ள கிளை, குருணாகல், கண்டி, மாத்தறை குடிவரவு – குடியகல்வு திணைக்கள கிளை அமைந்துள்ள பிரதேச செயலக அலுவலகங்களில், மாவட்ட பதிவாளர் பிரிவு வாரத்தின் 5 நாட்களும் இயங்குமெனவும், அவற்றில் வழமை போன்று குறித்த சேவைகளை பெற முடியுமென அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அனைத்து தபால் அலுவலகங்களும் செவ்வாய், புதன், வியாழக்கிழமைகளில் மாத்திரம் திறந்திருக்கும் என தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளார்.